ராமதாஸோடு கைகோர்த்த அன்புமணி.?கொண்டாட்டத்தில் பாமக
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் தனது தாயார் பிறந்தநாள் விழாவில் அன்புமணி கலந்து கொண்டது பாமகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ்- அன்புமணி மோதல்
அன்புமணி மற்றும் அவரது தந்தையும், பாமக நிறுவனருமான ராமதாஸ் இடையே நடந்து வரும் மோதல் தமிழக அரசியல் களத்தில் கடந்த பல மாதங்களாகவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போதே இரு தரப்பிற்கும் இடையே கூட்டணி முடிவு செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
அடுத்ததாக புதுச்சேரியில் நடந்த பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், ராமதாஸ் தனது மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை மாநில இளைஞரணி தலைவராக நியமித்தார். இதற்கு மேடையிலேயே கடும் எதிர்ப்பை பதிவு செய்தார் அன்புமணி, அப்போது ராமதாஸ், "இது நான் ஆரம்பித்த கட்சி, என் முடிவை ஏற்காதவர்கள் வெளியேறலாம்" என்று ஆவேசமாக பதிலளித்தார்.
மோதலுக்கு காரணம் என்ன.?
இந்த மோதல் முற்றிய நிலையில் ராமதாஸ் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தானே தலைவராக பொறுப்பேற்பதாக அறிவித்தார். அன்புமணியை செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என கூறினார். ஆனால் அன்புமணியோ பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவன் நான் எனவும், என்னை நீக்க அதிகாரம் இல்லையென தெரிவித்தார்.
இந்த மோதல்களால் பாமக நிர்வாகிகள் இரு தரப்பாக பிரிந்ததனர். அன்புமணி தன்னை மதிக்கவில்லை என்றும், கட்சியை கைப்பற்ற முயல்வதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார். மேலும், அன்புமணி தனது தாய் மற்றும் தந்தையை அவமதிப்பதாகவும் கூறினார். மோதல் முற்றிய நிலையில் இரு தரப்பும் தேர்தலை ஆணைத்தையும் நாடியது. அடுத்ததாக பாமகவை கைப்பற்றும் வகையில் இரு தரப்பும் போட்டி பொதுக்குழு அறிவித்தது.
போட்டி பொதுக்குழு கூட்டம்
அந்த வகையில் கடந்த வாரம் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் அன்புமணியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இரு தரப்பிற்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவர குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் முயற்சித்த போதிலும், பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் தோல்வியடைந்தன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாமகவினர் கடந்தசில மாதங்களாக வேதனையில் மூழ்கியிருந்த நிலையில் அன்புமணி தனது தந்தை வீடு அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு குடும்பத்தோடு சென்றது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
தைலாபுரம் வீட்டிற்கு சென்ற அன்புமணி
பாமக நிறுவனர் ராமதாஸின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் விழா நேற்று தைலாபுரம் தோட்டத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் . அன்புமணி தனது குடும்பத்துடன் சென்று தனது தாயார் சரஸ்வதியின் ஆசியைப் பெற்றுள்ளார். இந்த விழாவின் போது கடந்த சில மாதங்களாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு வந்த அன்புமணியும் ராமதாசும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. எனவே கடந்த சில மாதங்களாக நடைபெற்ற மோதல்கள் முடிவுக்கு வந்துவிடுமா என பாமகவினர் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.