தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ.பெரியசாமி தற்போது திமுக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி துறையை கவனித்து வருகிறார். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரின் திண்டுக்கல் வீடு, மதுரை, சென்னை என அவர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. சென்னை பசுமைவழிச் சாலை மற்றும் எம்எல்ஏ விடுதி என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னதாக அமைச்சரின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் தங்கள் பங்கிற்கு களத்தில் இறங்கி சோதனை நடத்தி வருவது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.