அதிகாலையில் அலறிய சென்னை.! பிரபல ரவுடி என்கவுன்ட்டர்! யார் இந்த தொப்பை கணேஷ்?
மாதவரம் ரவுண்டானா அருகே தொப்பை கணேசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பதுங்கியிருந்த ரவுடியை போலீசார் பிடிக்க சென்றனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றம்
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொலை, கொள்ளை, பலாத்காரம், போதை பொருள் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதுதொடர்பாக அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தனர். தமிழகத்தில் சிறுமிகள் முதல் முதியவர் வரை யாருக்குமே பாதுகாப்பு இல்லை என குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் என்கவுன்ட்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தொப்பை கணேசன் என்கவுன்ட்டர்
ஜனவரி 30ம் தேதி மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளை அடித்த வழக்கில் தொப்பை கணேசன் தேடப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாதவரம் ரவுண்டானா அருகே தொப்பை கணேசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பதுங்கியிருந்த ரவுடியை போலீசார் பிடிக்க சென்றனர். அப்போது தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் தற்காப்புக்காக என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த தொப்பை கணேசன்?
என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ரவுடி தொப்பை கணேஷ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. ரூ. 25 லட்சம் பணம், 15 சவரன் நகை கொள்ளை அடித்த வழக்கில் தொடர்புடையவர். இவர் ஒரு ஏ பிளஸ் சரித்திரப் பதிவு குற்றவாளி. என்கவுன்டர் செய்யப்பட்ட தொப்பை கணேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல ரவுடி சேராவின் கூட்டாளி
தொப்பை கணேஷ் வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவுடி சேராவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொப்பை கணேஷ் போலீசாரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகாலை என்கவுன்டர் மற்ற ரவுடிகளின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

