ஆசிரியர்களுக்கு ஓய்வுகால பலன்கள்.! முதல்வருக்கு பறந்த முக்கிய அறிக்கை
தமிழகத்தில் சுமார் 1000 ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மேலும், தணிக்கைத் தடை என்ற பெயரில் 8 வகையான ஊக்க ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் அன்புமணி இது தொடர்பாக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள்
தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வுய் பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை உடனே செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் வழங்கவில்லை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி ஓய்வு பெறும் போது கடைசி பணி நாளில் அவர்களுக்கு உரிய ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், 2024&25ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெற்ற தொடக்கக்கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களில் 1000 பேருக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அவை அவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வுக்காலப் பயன்களை வழங்க வேண்டியது அரசின் முதல் கடமை; அதை வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியத்தை வழங்க மறுக்கும் தமிழக அரசு
அதேபோல், நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பி.லிட்., பி.எட். பட்டப்படிப்புகளை படித்து முடித்ததற்காக வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை வழங்க தமிழக அரசு மறுக்கிறது. கற்பிக்கும் பாடம் தவிர்த்து பிற பாடங்களில் பட்டம் பெறுதல், நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட் பட்டம் பெறுதல், ஆசிரியர்களில் இளையோர் & முதியோர் இடையிலான ஊதிய முரண்பாடுகளைக் களைதல்,
பதவி உயர்வுக்கான ஊதியத்தை நிர்ணயித்தல், 1993&ஆம் ஆண்டின் சிறப்புப் படிகளை பெறுதல், கீழ்நிலை, மேல்நிலை பணிக்காலத்தை ஒருங்கிணைத்து தேர்வு நிலை, சிறப்பு நிலை தகுதிகளைப் பெறுதல், 2009&ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியாக பணியாற்றியதற்கான தேர்வுநிலை தர ஊதியம் பெறுதல் ஆகியவற்றை தணிக்கைத் தடையை காரணம் காட்டி தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
தணிக்கைத் துறையின் தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும் போது, அதற்கு தணிக்கைத் துறையின் தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. தேவையின்றி விதிக்கப்படும் தடைகளை உடனடியாக அகற்றி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைப்பதை உறுதி செட்ட வேண்டியது அரசின் கடமை ஆகும். அதிலிருந்து திமுக அரசு ஒருபோதும் பின்வாங்கக்கூடாது. தமிழ்நாட்டில் விடுதலைக்கு பிந்தைய காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக மிக மோசமாக செயல்படும் அரசு என்றால், அது இப்போது ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு தான்.
பகுதிநேர ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் பணி நிரந்தரம்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும், பகுதிநேர ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வழங்கிய திமுக, அவற்றின் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக செய்யும் பெருந்துரோகம். ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.