- Home
- Tamil Nadu News
- ராமதாஸ்க்கு டப் கொடுக்கும் அன்புமணி.! பதவியில் இருந்து உடனே நீக்குங்க- சபாநாயகருக்கு பரபரப்பு கடிதம்
ராமதாஸ்க்கு டப் கொடுக்கும் அன்புமணி.! பதவியில் இருந்து உடனே நீக்குங்க- சபாநாயகருக்கு பரபரப்பு கடிதம்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி அதிகாரம் தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.சிவக்குமாரை நியமித்து அன்புமணி உத்தரவு

ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான அதிகார மோதலானது வலுத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இருவருக்கும் இடையே கூட்டணி தொடர்பாக மோதல் உருவானது. ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணி வைக்க திட்டமிட்ட நிலையில், அன்புமணியோ பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்திருந்தார்.
இதனால் தொடங்கிய மோதல் அடுத்ததாக தருமபுரி தொகுதியில் அன்புமணி தனது மனைவியை போட்டியிட வைத்தது ராமதாஸ்க்கு ஷாக் கொடுத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பாமக படு தோல்வி அடைந்தது. தருமபுரியை தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனையடுத்து புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தான், ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக நியமித்தார்.
இரண்டாக உடையும் பாமக
இதனை கடுமையாக எதிர்த்த அன்புமணி, முகுந்தனுக்கு கட்சி அனுபவம் இல்லை எனவும், இந்த நியமனம் ஏற்க முடியாது எனவும் மேடையிலேயே தெரிவித்தார். மேலும் மைக்கை தூக்கி எரிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ், "நான் உருவாக்கிய கட்சி, நான் சொல்வதுதான் நடக்கும்" என்று கூறி, உடன்படாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் எனத் ஆவேசமாக அறிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்துக்கு தொண்டர்கள் தன்னை சந்திக்க வரலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே சமாதான முயற்சிகள் நடைபெற்றாலும் அது தோல்வியேலேய முடிவடைந்தது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தான் தான் தலைவர் என அறிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டிலும் இருவருக்கும் இடையிலான மோதல் வெளிப்பட்டது.
போட்டி போட்டு களத்தில் இறங்கும் தந்தை- மகன்
இந்த மோதல் காரணமாக பாமக இரண்டாக உடைந்துள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளை நீக்கி விட்டு புதிய மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை ராமதாஸ் நியமித்தார். ஆனால் ராமதாஸ் எந்த உத்தரவும் செல்லாது என அறிவித்து ராமதாஸ்க்கு ஷாக் கொடுத்தார் அன்புமணி, அடுத்ததாக தனது செல்வாக்கை நிரூபிக்க பொதுக்குழு நிர்வாகிகளை சந்திக்க ஒவ்வொரு மாவட்டமாக அன்புமணி பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு பதிலடி கொடுக்க ஜூலை 10, 2025 அன்று கும்பகோணத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த மோதலால் ராமதாஸ் ஆதரவாளராக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அன்புமணிக்கு நிர்வாகிகளை நீக்க அதிகாரம் இல்லையென ராமதாஸ் சரவெடியாக வெடித்துள்ளார்.
பாமகவில் இருந்து அருள் நீக்கம்
பா.ம.க. கொறடாவாக அருள் உள்ளார். ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகுதான் நீக்க முடியும் என ராமதாஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு அன்புமணி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்த சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும்,
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப் பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. சி.சிவக்குமார் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய கொறடாவாக சிவக்குமார்- அன்புமணி அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றத்தை பதிவு செய்து, உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்த அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வரும் நிலையில், பாமகவில் தந்தை - மகன் இடையை அதிகார மோதாலால் அக்கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை பரிதவித்து வருகிறார்கள். எனவே இந்த மோதலுக்கு எப்போது முடிவு வரும் என ஏங்கி காத்துள்ளனர்.