- Home
- Tamil Nadu News
- என்னையே கட்சியிலிருந்து நீக்கிறியா! வண்டியை பனையூருக்கு திருப்பி இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த நிர்வாகி!
என்னையே கட்சியிலிருந்து நீக்கிறியா! வண்டியை பனையூருக்கு திருப்பி இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த நிர்வாகி!
விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததால் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஆனந்தகுமாரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து, ஆனந்தகுமார் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்துள்ளார்.

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து
திண்டுக்கல் அதிமுக மாவட்ட ஒருங்கிணைந்த முன்னாள் பாசறை மாவட்ட செயலாளரும் தற்போது மேற்கு மாவட்ட தலைவருமாக இருந்து வந்தவர் ஆனந்தகுமார். இவர், கடந்த ஜூன் 22ம் தேதி தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக இருந்த ஆனந்த குமாரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
அதிமுகவில் இருந்து நீக்கம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில்: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைத் தலைவர் ஆனந்தகுமார், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்தகுமார்: அதிமுகவை அழிவுப் பாதையை நோக்கி எடப்பாடி பழனிசாமி கொண்டு செல்கிறார். எம்ஜிஆர் ஜெயலலிதா பாதையில் ஆளுமை மிக்க தலைவராக விஜய் உள்ளார் என்று தெரிவித்தார்.
புஸ்ஸி ஆனந்த்
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஆனந்தகுமார் சென்னையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து அக்கட்சியில் இணைந்ததாக கூறப்படுகிறது. பனையூரில் நடக்கும் த.வெ.க. செயற்குழு கூட்டத்திற்கு வந்த அவருக்கு கட்சியின் துண்டை அணிவித்து புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார்.