அமமுக முக்கிய பிரமுகர் அதிமுகவில் ஐக்கியம்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளால் தினகரன் அமமுகவைத் தொடங்கினார். ஆனால் தொடர் தோல்விகளால் முக்கிய நிர்வாகிகள் திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

டிடிவி.தினகரன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக பல பிளவுகளாக அக்கட்சி பிளவுபட்டது. பின்னர் அக்கட்சியில் இருந்து டிடிவி.தினகரனை ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடியாக நீக்கினர். இதனையடுத்து டிடிவி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டதால் செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், மேலும் 18 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் அவருடன் சென்றனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
அடுத்தடுத்து தேர்தலில் தோல்வியை சந்தித்ததை அடுத்து செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், பழனியப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். மேலும் சில மாவட்ட நிர்வாகிகள் தாய் கழகமான அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் அமமுகவில் முக்கிய பிரமுகர் அதிமுகவில் இணைந்து டிடிவி.தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அமமுக மதுரை மாநகர வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால்
இந்நிலையில் அமமுக மதுரை மாநகர வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால். இவரது மாவட்டத்துக்கு கீழ் மதுரை வடக்கு, மதுரை மேற்கு ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனின் தீவிர விசுவாசியாக தொடக்கம் முதலே இருந்து வந்தார். இவர் அதிமுகவில் பகுதி செயலாளராக இருந்தார். 2016 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதியில் ஜெயபால் போட்டியிட்டார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.
செல்லூர் ராஜூ
அமமுகவில் மிகத் தீவிரமாக கட்சிப் பணியாற்றி வந்தார். இந்நிலையில்திடீரென ஜெயபால் தலைமையில், அக்கட்சி மாவட்ட அவைத் தலைவர் வி.கோவிந்தராஜ், மேற்கு மூன்றாம் பகுதி செயலாளர் பி.தங்கராமு, வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சரும், மாநகர அதிமுக மாவட்டச் செயலாளருமான செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.