திருநின்றவூர் நகராட்சி விசிக கவுன்சிலர் கோமதி, கணவர் ஸ்டீபன் ராஜால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கள்ளக் காதல் சந்தேகத்தில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சென்னை அருகே திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் விசிக திருநின்றவூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி. 26வது வார்டு விசிக கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மானாக இருந்து வருகிறார். இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 4 ஆண் குழந்தைகள் உள்ளன.
விசிக கவுன்சிலர்
இந்நிலையில், கவுன்சிலர் கோமதிக்கும் ஆண் நண்பர் ஒருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததை அடுத்து தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில் கவுன்சிலர் கோமதி தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
மனைவியை கொலை செய்த கணவர்
இதனை பார்த்த கணவர் ஸ்டீபன் ராஜ் கோமதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரச்சனை வேறு மாதிரி சென்றதை அடுத்து அங்கிருந்து ஆண் நண்பர் தப்பி சென்றுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த ஸ்டீபன் ராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் கோமதியை தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
காவல் நிலையத்தில் சரண்
பின்னர், ஸ்டீபன் ராஜ் அருகில் இருந்த திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு சென்று மனைவியை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஸ்டீபனை கைது செய்த போலீசார், கொலைக்கான குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் நடுரோட்டில் கொலை ெசய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
