அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்த போலீஸ்..! என்ன காரணம்??
தமிழகத்தில் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களின் வரிசையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.

வெடிகுண்டு மிரட்டல்கள்
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம், சென்னை உயர் நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையங்கள், சுங்க இல்ல தலைமை அலுவலகம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது.
சென்னை தலைமை செயலகம்
அதேபோல் நேற்று முன்தினம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம், கிண்டி ராணுவ பயிற்சி மையம் மற்றும் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள உணவகம் என 3 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க முடியாமல் போலிசார் திணறி வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகம்
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராயப்பேட்டை போலீஸ்
இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக ராயப்பேட்டை போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.