வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. 14 வயதில் அதிவேக சதம் விளாசி புதிய சாதனை!
இந்திய இளம் வீரர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி தொடரில் அதிவேக சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

வைபவ் சூர்யவன்ஷி அசத்தல் சதம்
சையத் முஷ்டாக் அலி டி20 டிராபியில் 14 வயதான இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி அட்டகாசமான சதம் அடித்து அசத்தியுள்ளார். பீகார் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் வைபவ் 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 108 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் முஷ்டாக் அலி அணியில் சதம் அடித்த இளைய வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றார். வைபவ் மொத்தம் 7 சிக்சர்கள், 7 பவுண்டரிகளை விளாசினார்.
ஆசிய கோப்பையியிலும் மின்னல் வேக சதம்
சையத் முஷ்டாக் அலி டிராபியில் முதன் முறையாக விளையாடியுள்ள இவர் தனது 5வது போட்டியில் சதம் அடித்துள்ளார். சமீபத்தில் முடிவடைந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 239 ரன்கள் குவித்து ரன் குவிப்பவர்களில் இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த தொடரில் மட்டும் 22 சிக்ஸர்களும் 20 பவுண்டரிகளும் அவர் விளாசி இருந்தார். அதிகப்பட்சமாக 144 ரன்கள் அடித்தார்.
ஐபிஎல்லில் மேட்ச் வின்னர்
அதுவும் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். கடந்த ஐபிஎல் சீசனில் இளம் வயதில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்திருந்தார். 38 பந்துகளில் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசிய அவர் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த முதல் வீரர், அதிவேக சதம் என பல்வேறு சாதனைகளை அவர் படைத்தார்.
19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை அணியில் இடம்
வரவிருக்கும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பைக்கான அணிக்கும் வைபவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றொரு இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான அணியில் வைபவ் சேர்க்கப்பட்டார். ஆசிய கோப்பைக்கான இந்திய U19 அணி: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வான்ஷ் சிங், யுவராஜ் கோஹில், கனிஷ்க் சௌஹான், கிலன் படேல், நமன் புஷ்பக், டி தீபேஷ், ஹெனில் படேல், உதவ் மோகன், ஆரோன் ஜார்ஜ், கிஷன் குமார் சிங்.

