இங்கிலாந்து U19 அணிக்கு எதிரான 4வது போட்டியில் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.

Vaibhav Suryavanshi Scores Fastest Century Against England U19: இந்தியாவின் நட்சத்திர இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து U19 அணிக்கு எதிரான 4வது போட்டியில் அதிவேக சதம் அடித்து அசத்தியுள்ளார். வெறும் 78 பந்துகளை சந்தித்த வைபவ் சூர்யவன்ஷி 10 சிக்சர்கள், 13 பவுண்டரியுடன் 143 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 363 ரன்கள் குவித்தது.

வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம்

ஜூலை 5 ஆம் தேதி வொர்செஸ்டரின் நியூ ரோட்டில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து பவுலர்களை சிதறடித்து நாலாபக்கமும் பந்துகளை சிதறவிட்ட வெறும் 14 வயதான பாலகன் வைபவ் சூர்யவன்ஷி அதிவேக சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் விஹான் மல்ஹோத்ராவும் (121 பந்தில் 129) சதம் அடித்திருந்தார்.

இளம் வயதில் சதம் விளாசி சாதனை

இந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 52 பந்துகளில் சதத்தை எட்டியிருந்தார். இதன்மூலம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை சூரியவன்ஷி பெற்றார். மேலும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் போட்டிகளில் இளம் வயதில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 14 வயது 100 நாட்களில் இவர் சதம் விளாசியிருக்கும் நிலையில், வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 2009ல் 14 வயது 241 நாட்களில் சதம் அடித்து இருந்தார். இப்போது சாண்டோவின் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி தகர்த்தெறிந்துள்ளார்.

இங்கிலாந்து தொடரில் கலக்கும் இளம் புயல்

ஏற்கெனவே ஐபிஎல்லில் அதிவேக சதம் நொறுக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து U19 அணிக்கு எதிரான தொடரிலும் தொடர்ந்து பேட்டிங்கில் கலக்கி வருகிறார். முதல் இரண்டு போட்டிகளில் குறைந்த பதில் 40+ ரன்களை அடித்தார். 3வது ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போது 4வது போட்டியில் குறைந்த பந்தில் சதம் அடித்து மீண்டும் பேசுபொருளாகியுள்ளார்.

ஐபிஎல்லில் எத்தனை பந்துகளில் சதம்?

ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 38 பந்துகளில் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசி புதிய வரலாறு படைத்தார். 14 வயது 32 நாட்களே ஆன அவர் இளம் வயதில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த சீசனில் அதிவேகமாக அரைசதம் அடித்த முதல் வீரர், இந்த ஐபிஎல் சீசனில் அதிவேக சதம் என பல்வேறு சாதனைகளை படைத்தார்.