- Home
- Sports
- Sports Cricket
- டி20 கிரிக்கெட்டில் 32 பந்துகளில் சதம்..! 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சாதனை! 297 ரன்கள் குவித்த இந்தியா!
டி20 கிரிக்கெட்டில் 32 பந்துகளில் சதம்..! 14 வயது வைபவ் சூர்யவன்ஷி சாதனை! 297 ரன்கள் குவித்த இந்தியா!
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 14 வயதான இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய ஏ அணி 297 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளது.

வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம்
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் 2வது போட்டியில் இந்தியா ஏ மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் வீரர் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
11 பவுண்டரி, 15 சிக்சர்கள் விளாசினார்
இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த நிலையில், தொடக்கம் முதலே ஐக்கிய அரபு அமீரக அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளிய வைபவ் சூர்யவன்ஷி சகட்டு மேனிக்கு பவுண்டரிகளும், சிக்சருமாக விளாசித் தள்ளினார்.
மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை நொறுக்கிய அவர் வெறும் 32 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி வெறும் 42 பந்துகளில் 11 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 144 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதிவேக சதம் விளாசிய 2வது இந்தியர்
32 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அபிஷேக் சர்மா, உர்வில் படேல் ஆகியோர் 28 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதம் விளாசிய இந்தியர்கள் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி 35 பந்தில் சதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் நொறுக்கிய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசிய இந்தியர்களின் பட்டியல்:
உர்வில் படேல் 28 பந்துகளில் சதம் - குஜராத் vs திரிபுரா (2024)
அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் சதம் - பஞ்சாப் vs மேகாலயா (2024)
ரிஷப் பண்ட் 32 பந்துகளில் சதம் - டெல்லி vs ஹிமாச்சல பிரதேசம் (2018)
வைபவ் சூர்யவன்ஷி 32 பந்துகளில் சதம் - இந்தியா A vs UAE (2025)
297 ரன்கள் குவித்த இந்திய ஏ அணி
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி சதத்தால் இந்தியா ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 297 ரன்கள் குவித்து பிரம்மிக்க வைத்துள்ளது. இந்திய அணி கேப்டன் ஜிதேஷ் சர்மா 32 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 83 ரன்கள் விளாசி களத்தில் இருந்தார். நமன் தீர் 34 ரன்கள் எடுத்தார். இமாலய இலக்கை நோக்கி ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங் செய்கிறது.