- Home
- Sports
- Sports Cricket
- சர்பராஸ் கான் மின்னல் வேக சதம்! இவரையா டீம்ல எடுக்காம வச்சிருக்கீங்க! பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள்!
சர்பராஸ் கான் மின்னல் வேக சதம்! இவரையா டீம்ல எடுக்காம வச்சிருக்கீங்க! பிசிசிஐயை விளாசும் ரசிகர்கள்!
முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டியில் சர்பராஸ் கான் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவரை இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

சர்பராஸ் கான் அதிரடி சதம்
முஷ்டாக் அலி டிராபி டி20 போட்டியில் இந்திய இளம் வீரர் சர்பராஸ் கான் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். மும்பை அணிக்காக விளையாடும் சர்பராஸ் கான் அசாம் அணிக்கு எதிரான போட்டியில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்களுடன் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்து நொறுக்கினார்.
சர்பராஸ் கானின் அபார சதத்தால், ரியான் பராக் தலைமையிலான அசாமை 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை.
இந்திய அணியில் தொடர் புறக்கணிப்பு
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத்தது. அசாம் அணி 19.1 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணி தொடர்ச்சியாக பெறும் நான்காவது வெற்றி இதுவாகும். முதல் தர போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சர்பராஸ் கான் தொடர்ந்து இந்திய அணியில் புறக்கணிக்கப்படுகிறார். வெளிநாட்டு தொடர்கள் மட்டுமின்றி இந்தியா அணி விளையாடும் உள்நாட்டு தொடர்களிலும் புறக்கணிக்கப்படுகிறார்.
பிசிசிஐ, கவுதம் கம்பீருக்கு ஸ்டேட்மென்ட்
டெஸ்ட் போன்று பொறுமையாக ஆடுவது மட்டுமின்றி தன்னால் டி20 போட்டிகளிலும் அதிரடியாக விளையாட முடியும் என பிசிசிஐ மற்றும் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு சர்பராஸ் கான் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி வரும் 16ம் தேதி ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் நடைபெற உள்ள நிலையில், சர்பராஸ் கானின் அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2 ஆண்டுகளாக ஐபிஎல்லில் இல்லை
சர்பராஸ் கான் கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடினார். நான்கு போட்டிகளில் 53 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2015 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமானதிலிருந்து, அவர் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட பல அணிகளில் இடம்பிடித்து விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவின் டெஸ்ட் தொடரில் இருந்தபோதும், ஐபிஎல் ஏலத்தில் அவர் விற்கப்படாமல் போனார்.
மினி ஏலத்தில் ஜொலிப்பாரா?
ஆனால் வரவிருக்கும் மினி ஏலத்தில் பேட்ஸ்மேன்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் சர்பராஸ் கான் ஐபிஎல் உரிமையாளர்களின் கவனம் ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அவரின் திறமைக்கு மதிப்பு கொடுத்து இனிமேலாவது இந்திய அணியிலும் எடுக்க வேண்டும் என பிசிசிஐக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

