WI vs IND: அக்ஸர் படேல் காட்டடி அரைசதம்.. 2வது ODIயிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா
அக்ஸர் படேலின் அதிரடி அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 312 ரன்கள் என்ற இலக்கை அடித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), பிரண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், அகீல் ஹுசைன், ரொமாரியோ ஷெஃபெர்டு, அல்ஸாரி ஜோசஃப், ஜெய்டன் சீல்ஸ், ஹைடன் வால்ஷ்.
முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷேய் ஹோப் மற்றும் கைல் மேயர்ஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 65 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடிய கைல் மேயர்ஸ் 23 பந்தில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஷமர் ப்ரூக்ஸ் 35 ரன்கள் அடித்தார். பிரண்டன் கிங் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் ஷேய் ஹோப்புடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் பூரன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். அரைசதம் அடித்த பூரன் 77 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 74 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ஷேய் ஹோப் சதமடித்தார். ஹோப்பும் பூரனும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். சதமடித்த ஹோப் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹோப்பின் சதம், பூரனின் அரைசதம் மற்றும் மற்ற வீரர்களின் சிறு சிறு பங்களிப்பால் 50 ஓவரில் 311 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
312 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் மிக மந்தமாக பேட்டிங் ஆடி 31 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 ரன்கள் அடித்தார்.
3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 63 ரன்கள் அடித்தார். ஆனால் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியிலும் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சஞ்சு சாம்சன் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய சாம்சன் 51 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, தீபக் ஹூடாவும் 33 ரன்னில் வெளியேற, 44.1 ஓவரில் 256 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.
இதையும் படிங்க - அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வு..? பாண்டியாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ரவி சாஸ்திரி
அதன்பின்னர் காட்டடி அடித்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய அக்ஸர் படேல் அரைசதம் அடித்தார். 35 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அக்ஸர் படேலின் அதிரடி அரைசதத்தால் கடைசி ஓவரின் 4வது பந்தில் இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.