அதிமுக கூட்டணி அவ்வளவுதானா? திமுக கூட்டணியில் புதிய கட்சி... இபிஎஸ் அதிர்ச்சி
தமிழக சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. இந்நிலையில், அதிமுக முன்னாள் நிர்வாகி பசும்பொன் பாண்டியனின் அதிமமு கழகம் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 முதல் 9 மாத காலம் மட்டுமே உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. மக்களை சந்திக்கும் வகையில் தற்போதே தொகுதி, தொகுதியாக, வீடு வீடாக அரசியல் கட்சிகள் செல்ல தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழகம் என்ற பெயரில் திமுக அரசின் திட்டங்களையும், தமிழகத்திற்கு எதிராக பாஜக அரசின் நடவடிக்கைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து வருகிறது.
இதே போல அதிமுக சார்பாக தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தொகுதி தொகுதியாக செல்லும் எடப்பாடி பழனிசாமி, மக்களின் குறைகளை கேட்டறிந்து வருவது மட்டுமில்லாமல்,
அதிமுக ஆட்சி கால திட்டங்களை எடுத்துரைத்தும், அதிமுக ஆட்சிக்கு வந்தால் செய்யப்படும் வாக்குறுதிகளையும் கூறி வருகிறார். இதே போல பாமக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்திக்கவுள்ளார்.
எனவே இந்த பரபரப்பான சூழலில் கூட்டணியை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் உருவாக்கி வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக மட்டுமே உள்ளது. எனவே தேர்தல் நெருக்கத்தில் புதிய கட்சிகள் தங்கள் அணிக்கு வரும் என அதிமுக தலைமை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு திமுவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக முன்னாள் நிர்வாகியும், தற்போது புதிதாக கட்சியை தொடங்கிய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கட்சியின் புதிய கொடியை, கட்சியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அறிமுகம் செய்து வைத்து 2026ம் ஆண்டு திமுக ஆதரவாக தேர்தல் பணியை மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். திராவிட கொள்கைகளை தொடர்ந்து கடைபிடித்து வரும் கட்சியான திமுகவை 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆதரவு தெரிவித்து முழுமூச்சியாக தேர்தல் பணியை செய்ய போவதாக அறிவித்தார்.