பெண்களே! 30 வயசு ஆகிட்டா? இந்த விதையை கட்டாயம் சாப்பிடங்க! பல நோயில் இருந்து விடுதலை
30 வயதைக் கடந்த பெண்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பூசணி விதைகளை ஏன் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Pumpkin Seeds Benefits For Women
பூசணி விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு இவை அத்தியாவசியமானவை. பூசணி விதைகளை பச்சையாக அல்லது லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் செய்யும் இட்லி பொடி, ஸ்மூத்தி, சாலட் போன்றவற்றில் இந்த விதையை தூவியும் உண்ணலாம். இவற்றில் அடர்த்தியான கொழுப்பும், அதிக கலோரிகளும் இருப்பதால் அளவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக பூசணி விதைகளை எடுத்துக் கொண்டால் செரிமானக் கோளாறு ஏற்படக்கூடும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு எடை அதிகரிக்கலாம். இந்த பதிவில் கால் கப் அல்லது ஒரு ஸ்பூன் பூசணி விதைகளை அளவோடு எடுத்துக் கொண்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை காணலாம்.
எலும்பு ஆரோக்கியம்
மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஆஸ்டியோபோரசிஸ், எலும்பு அடர்த்தி குறைவு ஆகிய பிரச்சினைகளை தவிர்க்க பூசணி விதைகள் உதவுகின்றன. இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ் எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. நாள்தோறும் உணவில் பூசணி விதைகளை எடுத்துக் கொண்டால் நீண்டகால எலும்பு ஆரோக்கியம் உறுதி.
மன ஆரோக்கியம்
ஹார்மோன்கள் சமநிலையின்மை, நாள்பட்ட மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் பெண்களுக்கு தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. பூசணி விதைகள் வழங்கும் ஊட்டச்சத்துகளால் மனநிலை ஒழுங்குபடுகிறது. இதனால் இரவில் தரமான தூக்கம் கிடைக்கும். பூசணி விதையில் உள்ள துத்தநாகம், மெக்னீசியம் ஆகியவை நரம்பு மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தசைகளை தளர்த்தி நல்ல தூக்கம் ஏற்பட உதவும்.
இதய ஆரோக்கியம்
இதய நோய், வளர்சிதை மாற்றக் கோளாறுகளை குறைக்க பூசணி விதைகள் உதவுகின்றன. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இதில் உள்ள மெக்னீசியம், நார்ச்சத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்த சர்க்கரைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. டைப் 2 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும், வரும் முன் தடுக்கவும் உதவுகிறது.
தாதுக்களின் களஞ்சியம்
பூசணி விதைகள் பல ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம். மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, தாவர அடிப்படையிலான புரதம் ஆகியவை இதில் உள்ளன. இது மனநிலை, தசை செயல்பாடு, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மெக்னீசியம் உடலில் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட உயிர்வேதியியல் எதிர்வினைகளில் பங்கேற்கிறது. ஜிங்க் நோயெதிர்ப்பு செயல்பாட்டிலும், தோல் ஆரோக்கியத்திலும் குறிப்பாக ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவும் உதவுகிறது.
மாதவிடாய் சுழற்சி
மாதவிடாய் சுழற்சிகளின்போதும், மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின்பும் இந்த விதைகளை பெண்கள் எடுத்துக் கொள்வது நல்லது. மாதவிடாய் வலி, கர்ப்பம் அல்லது மாதவிடாய் நிறுத்தம் ஆகிய ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்ளும் பெண்கள் கண்டிப்பாக பூசணி விதைகளை சாப்பிட வேண்டும். இவை வளர்சிதை மாற்ற பிரச்சனைகள், ஹார்மோன் மீள்தன்மையை சரிசெய்ய உதவுகின்றன. மாதவிடாய் நின்ற பின்னர் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் சமநிலையின்மையை சரி செய்ய உதவுகிறது.