Chia Seeds : சியா விதை எல்லாருக்கும் நல்லதல்ல! இவர்கள் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது
சியா விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் அளப்பரியது. ஆனால் சில பிரச்சனைகள் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.

Chia Seed Side Effects
சியா விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும், அதன் நன்மைகள் அதிகம். இவை குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவை. இதில் காணப்படும் நார்ச்சத்து செரிமானத்திற்கு நல்லது. இவை மூளை செயல்பாட்டிற்கு உதவும் ஒமேகா-3 கொண்டுள்ளன. சைவ உணவு பிரியர்களுக்கு புரதச்சத்திற்கும் உதவும். பலருக்கு நன்மைகளை வாரி வழங்கினாலும், சிலருக்கு இவை வில்லனாகவே உள்ளன. இந்தப் பதிவில் சியா விதைகளை தவிர்க்க வேண்டிய 5 நபர்கள் யார் என்பதையும், அதன் காரணத்தையும் காணலாம்.
வயிற்று பிரச்சனை
சியா விதைகள் திரவத்தை உறிஞ்சி பந்து போல விரிவடையக் கூடியவை. இவற்றை உண்பதால் வயிறு நிரம்பிய உணர்வு வரும். ஏற்கனவே உங்களுக்கு வயிற்று வீக்கம், குடல் சம்பந்தமான வேறு பிரச்சினைகள் இருந்தால் சியா விதைகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சியா விதை செரிமானத்தை ஆதரிக்காமல் செரிமானத்தை தாமதப்படுத்தும். பிடிப்புகள், வாயு போன்ற பிரச்சனைகள் வரலாம்.
உயர் இரத்த அழுத்தம்
சியா விதைகளில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. ஆனால் இந்த நோய்களுக்காக மருந்து எடுப்பவர்கள் சியா விதைகளை உண்ணக் கூடாது. மருந்து எடுக்கும்போது சியா விதைகள் உண்டால் அவை இரத்த அழுத்தத்தை மிகவும் குறைத்துவிடும். இது தலைச்சுற்றல், உடல் பலவீனத்தை உண்டாக்கும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மிகக் குறைவாக எடுத்து கொள்ளலாம். மருத்துவரிடம் கேட்டுக்கொள்வது நல்லது.
இரத்தம் உறைதல்
சியா விதைகள் ஒமேகா-3, அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. இதயத்திற்கும், மூளைக்கும் ஏற்றது. ஆனால் சியா விதைகள் இரத்தத்தை மெலிதாக்க வாய்ப்புள்ளது. முன்னதாக இதற்காக மருந்து எடுப்பவராக இருந்தால் கவனம் தேவை. சியா விதைகள் தவிர்க்கப்பட வேண்டும். வார்ஃபரின், ஆஸ்பிரின், இரத்தம் உறைதலை மருந்துகள் எடுத்து கொண்டால் சியாவை எடுக்க வேண்டாம்.
ஒவ்வாமை
சியா விதைகளில் ஒவ்வாமை ஏற்படலாம். எள், கடுகு அல்லது ஆளி விதைகள் மீது உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், சியா விதைகளிலும் வர வாய்ப்புள்ளது. அரிப்பு, தடிப்புகள், சுவாசப் பிரச்சினைகள் ஏதேனும் அறிகுறிகள் வந்தால் கவனமாக இருக்கவும்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!
சியா விதைகளை ஊறவைத்து சாப்பிட்டாலும் நீங்கள் தனியாக தண்ணீர் குடிக்க வேண்டும். சியா தண்ணீரை உறிஞ்சு வைத்திருந்தாலும் அதை உண்பது நீரேற்றத்திற்கான கணக்கில் வராது. உடலை நீரேற்றமாக வைக்க 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். தண்ணீர் இல்லாத உலர்ந்த சியாவை உண்பதால் வீக்கம் அல்லது தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனை வரலாம். சியா விதைகளை ஊற வைத்துதான் சாப்பிட வேண்டும்.