Chia Seeds : தலை முதல் பாதம் வரை நன்மைகள்! சியா விதையை 'இப்படி' தான் சாப்பிடனும்
தலை முதல் பாதம் வரை உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும் சியா விதைகளை சாப்பிடும் சரியான வழியை இங்கு காணலாம்.

சியா விதைகள்
ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக திகழும் சியா விதைகளை உண்பதால் எடை குறைப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவும் இந்த விதைகள் உதவுகின்றன. இந்த விதைகளை எப்படி எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மையை தரும்? எப்படி சாப்பிடுவது பக்க விளைவுகளை உண்டாக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
சியா விதையின் ஊட்டச்சத்துக்கள்
எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் முதல் மாங்கனீசு, மெக்னீசியம், செலினியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய பல தாதுக்கள் சியா விதைகளில் நிறைந்துள்ளன. இதில் இதயத்திற்கு ஏற்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆல்பா-லினோலெனிக் (ALA) உள்ளது. இதய நோய், புற்றுநோய், அழற்சியின் அபாயம் குறைய உதவும். இந்த விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. செல் சேதத்தைக் குறைக்கின்றன.
எப்படி சாப்பிடக் கூடாது?
சியா விதைகளை முறையாக உண்டால் தான் நன்மை. இல்லெயென்றால் உடலுக்கு தீங்கு ஏற்படலாம். நேரடியாக சாப்பிடக் கூடாது. உலர்ந்த சியா விதைகளை அப்படியே வாயில் போட்டுவிட்டு சிலர் தண்ணீர் குடிப்பார்கள். இது மிகப்பெரிய தவறு. இதனால் விதைகள் உணவுக்குழாயில் விரிவடைய வாய்ப்புள்ளது. இதன்காரணமாக அடைப்புகள் உண்டாகலாம்.
எப்படி சாப்பிடலாம்?
சியா விதைகளை ஊறவைத்து சாப்பிட வேண்டும். இந்த விதைகள் தண்ணீரில் போட்ட பின் 27 மடங்கு எடையை உறிஞ்சும் தன்மை கொண்டது. சியா விதைகளை உண்ண 30 நிமிடங்கள் வரை ஊறவிடலாம். முடிந்தால் இரவு முழுவதும் கூட ஊறவைக்கலாம். இதனால் எளிதில் ஜீரணமாகும்.