தினமும் 1 கிமீ நடந்தால்... உடலில் என்ன நடக்கும் தெரியுமா?
தினமும் 1 கிலோமீட்டர் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறிய பழக்கமாக தோன்றினாலும், அது உடலின் இயக்கத்தை தூண்டி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் நடக்கும் மாற்றங்கள் என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

1 கிலோமீட்டர் நடை
இன்றைய வேகமான வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது பலருக்கும் சிரமமாகி வருகிறது. இதன் விளைவாக இளம் வயதிலேயே பல உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. இதை சமாளிக்க பெரிய உடற்பயிற்சி தேவையில்லை. தினமும் சிறிய அளவிலாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும், மனதிற்கும் நல்ல தொடக்கமாக இருக்கும்.
தினசரி நடைப்பயிற்சி
பலருக்கு நடைப்பயிற்சி குறித்து குழப்பங்கள் உள்ளன. காலை நடப்பது நல்லதா, மாலை நடப்பதா, எத்தனை தூரம் நடக்க வேண்டும் போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் நிபுணர்கள் கூறுவது, எந்த நேரமாக இருந்தாலும் தினசரி ஒரு ஒழுங்கான நடை பழக்கத்தை உருவாக்குவது முக்கியம்.
தினமும் நடப்பதின் நன்மைகள்
ஒரு கிலோமீட்டர் நடை சிறியது போல தோன்றினாலும், அது உடலுக்கு தேவையான அடிப்படை இயக்கத்தை வழங்குகிறது. நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறையில், இந்தச் சிறிய நடை கூட உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உடலில் உறைபோல் இருக்கும் உணர்வு குறைந்து, சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
இதயம் முதல் மனநலம் வரை
மேலும், நடைப்பயிற்சி மனநலத்திற்கும் பெரும் பலன் தருகிறது. தினமும் சிறிது நேரம் நடந்தால், மன அழுத்தம் குறைந்து, மனநிலை சீராகும். உடலில் எண்டார்பின் போன்ற ஹார்மோன்கள் சுரந்து, மனம் புத்துணர்ச்சி பெறும். வேலைப்பழுவில் இருக்கும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.
எடை குறைப்பு நடை
எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு கிலோமீட்டர் நடை மட்டும் போதுமானதாக இருக்காது. இது சுமார் 40–60 கலோரிகள் மட்டுமே எரிகிறது. ஆனால் தொடர்ந்து இதை பழக்கமாக்கி, தூரம் மற்றும் நேரத்தை அதிகரிப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். எனவே ஆரம்பத்தில் 1 கிமீ நடை தொடங்குகிறது, பின்னர் மெதுவாக அதை அதிகரிப்பதே சிறந்த முறையாகும்.

