Memory Loss: மக்களிடம் திடீரென அதிகரித்த ஞாபக மறதி நோய்.! சரி செய்ய என்ன தான் வழி?
சமீப காலமாக மனிதர்களிடையே ஞாபக மறதி அதிகரித்து வருகிறது. பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மக்களிடையே அதிகரித்த ஞாபக மறதி நோய்
அன்றாட வாழ்வில் சில விஷயங்களை மறப்பது என்பது சகஜம். ஆனால் தொடர்ந்து ஏற்படும் மறதி காரணமாக அன்றாட பணிகளில் சிரமம் ஏற்பட்டால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தற்போது உலக அளவில் ஞாபக மறதி நோய் அதிகரித்து வருகிறது. ஞாபக மறதி என்பது ஒரு நோயல்ல. அது ஒரு நோய்க்கான அறிகுறியாகும். இது மூளையின் செல்கள் அழிவதால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் ஒருவருடைய சிந்தனை, நினைவு, மொழி, சமூகத்திறன்கள் பாதிக்கப்படுகின்றன. ஞாபக மறதியானது அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் போன்ற நோய்களால் ஏற்படலாம்.
ஞாபக மறதி ஏற்படுவதற்கான காரணங்கள்
தற்போதைய பரபரப்பான கால சூழ்நிலையில் பல விஷயங்களில் மும்முரமாக இருக்கிறோம். காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்வது வரை நாம் பல விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். இதன் காரணமாகவே உணவு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் நம் சரியான கவனம் செலுத்த முடியவில்லை. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக நினைவாற்றல் பிரச்சனையும் பலருக்கும் ஏற்படத் தொடங்கியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் எளிமையான விஷயங்கள் கூட மறந்து விடுகின்றன. தொடர்ச்சியான மன அழுத்தம், தவறான உணவு முறை, போதுமான தூக்கமின்மை, பதற்றம் ஆகியவற்றின் காரணமாக நினைவாற்றல் பலவீனமடையத் தொடங்குகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர் என பலரும் ஞாபக மறதி பிரச்சனையை தற்போது உணர்ந்து வருகின்றனர்.
மூளை செல்களை பாதிக்கும் பிற காரணிகள்
ஞாபக மறதி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மூளையின் நரம்பு செல்களில் ஏற்படும் பாதிப்பு. இது மூளையின் தகவல் தொடர்பு திறனை குறைக்கிறது. குடும்பத்தில் யாருக்கும் மறதி நோய் இருந்தால் உங்களுக்கும் வர வாய்ப்பு அதிகம். இது மரபணுக்களால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வைட்டமின் பி12 குறைபாடு போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாகவும் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படலாம். கடுமையான மன அழுத்தம், மனச்சோர்வு மூளையின் நினைவுத்தன்மையை பாதிக்கும். தூக்கமின்மை மூளை செல்கள் புதுப்பிக்கப்படுவதை தடுத்து ஞாபக மறதிக்கு வழி வகுக்கலாம். நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவையும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளாகும்.
ஞாபக மறதியை குறைக்க சாப்பிட வேண்டியவை
ஞாபக மறதியை போக்கவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் சில வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன. தினமும் காலையில் ஊறவைத்த பாதாம், வால்நட், திராட்சை ஆகியவற்றை சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை செல்களின் வளர்ச்சிக்கு அவசியமானவை. எனவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள், வால்நட்ஸ், ஆளி விதைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். நல்ல நினைவாற்றலை பராமரிப்பதற்கு தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம், நெல்லிக்காய் ஆகியவை மூளைக்கு நன்மை தரும். ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனுடன் உட்கொள்வது நினைவாற்றலை மேம்படுத்துவதாக கூறுகின்றனர். இரவில் படுக்கச் செல்வதற்கு முன்னர் பாலில் மஞ்சள் கலந்து உட்கொள்வது மனச்சோர்வை நீக்குவதாகவும் கூறப்படுகிறது.
நினைவாற்றலை அதிகரிக்க உடற்பயிற்சி
தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து நினைவுத்திறனை மேம்படுத்தும். புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்வது, வாசிப்பது, புதிர் விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபடலாம். நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசுவது, வெளியே செல்வது போன்ற சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது மூளை புத்துணர்ச்சி பெற உதவும். தியானம், யோகா, மூச்சுப் பயிற்சி, பிரணாயாமம் ஆகியவற்றை செய்வது, மனதை அமைதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மூளைக்கு தேவையான ஆக்சிஜனையும் வழங்கி மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவுகின்றன. எனவே இந்த உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவ ஆலோசனை தேவை
ஞாபக மறதி என்பது பொதுவான ஒரு பிரச்சனை தான். ஆனால் இது உங்கள் அன்றாட வாழ்வை பாதிக்கும் பட்சத்தில் இது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை ஞாபகம் மறதி கடுமையாக பாதிக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதன் பாதிப்பை குறைக்கலாம். உங்களுக்கு ஞாபகம் மறதி நோய் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.