- Home
- உடல்நலம்
- Makhana : நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு..மக்கானா இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? புது தகவல்
Makhana : நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு..மக்கானா இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமா? புது தகவல்
மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதைகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Makhana Increase Blood Sugar Levels
சமீப காலமாக மக்கானா எனப்படும் தாமரை விதைகள் மக்களால் விரும்பி சாப்பிடப்படுகிறது. பலருக்கும் இது ஒரு விருப்பமான தின்பண்டமாக இருக்கிறது. பாப்கார்ன் போலவே அதிக சுவை இருப்பதால் இதை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். அதே சமயம் மக்கானாவை சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இரத்த சர்க்கரை அளவுகள் அதிகரித்ததாக மெட்டபாலிக் ஹெல்த் கோச் கரன் சரின் கூறியிருக்கிறார். தான் மக்கானா சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப் பின்னர் தன்னுடைய சர்க்கரை அளவு 76 புள்ளிகள் அதிகரித்து விட்டதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார். அதற்கு காரணம் 78% கலோரிகள் மக்கானாவில் உள்ள கார்போஹைட்ரேட்டிலிருந்து வருவதாக கூறியுள்ளார். 30 கிராம் தாமரை விதைகளில் 5 கிராம் புரதமும், 23 கிராம் கார்போஹைட்ரேட்டும், 4.5 கிராம் நார்ச்சத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மக்கானா இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்
தாமரை விதைகளில் கொழுப்புகளில் அளவு குறைவுதான். இருப்பினும் தாமரை விதைகளுக்கு மக்கள் ஏன் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது தனக்கு புரியவில்லை. மக்கானாவிற்கு பதிலாக உப்பு சேர்க்கப்படாத வேர்க்கடலை, பருப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவற்றில் அதிக புரதம், குறைவான அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு மட்டுமே இருக்கிறது. இவை மக்கானாவை காட்டிலும் ஆரோக்கியமான தின்பண்டங்கள் என்று கரன் தெளிவுபடுத்தியுள்ளார். கரனின் இந்த பதிவு இணையத்தில் வைரலான நிலையில், இவர் கூறுவது உண்மையா என்பது குறித்து மும்பையைச் சேர்ந்த அப்பல்லோ ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் உணவு நிபுணர் பவுசியா அன்சாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
மக்கானாவில் அதிகம் கார்போஹைட்ரேட் தான் உள்ளது
அன்சாரி கூறியதாவது, மக்கானாவை பலரும் ஒரு சிறந்த தின்ப்பண்டமாக கருதுகின்றனர். கலோரி குறைவாக எடுத்துக் கொள்ள விரும்பும் நபர்கள் மக்கானா விதைகளை சாப்பிடுகின்றனர். மக்கானாவில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட், சிறிதளவு புரதமும் காணப்படுகிறது. இருப்பினும் மக்கானா விதைகளை சாப்பிட்டப் பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார். இதற்கு காரணம் மக்களானா விதைகளில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதாகவும், இடைவெளி இல்லாமல் ஒரேடியாக மக்கானவை சாப்பிடும் பொழுது உடலில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகரித்து அதன் விளைவாக இரத்த சர்க்கரையின் அளவு கணிசமாக உயர்வதாக அன்சாரி விளக்கமளித்துள்ளார்.
மக்கானாவை இப்படி சாப்பிடக்கூடாது
மேலும் மக்கான விதைகளை நாம் எப்படி தயாரித்து சாப்பிடுகிறோம் என்பதும் இரத்த சர்க்கரை அளவில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார். நெய் அல்லது எண்ணெயில் வறுத்தெடுக்கும் பொழுது அதில் உள்ள கொழுப்புகளின் அளவு அதிகரித்து உடலுக்கு தீமை விளைவிப்பதாகவும், நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே நம்முடைய இரத்த சர்க்கரையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், மக்கானாவை மிதமாக சாப்பிடும் பொழுது இரத்த சர்க்கரையில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை, அதேசமயம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே மக்கானா விதைகளை நெய் அல்லது எண்ணெயில் வறுத்து சாப்பிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்கானாவை சாப்பிடும் முன் மருத்துவ ஆலோசனை தேவை
மக்கானா விதைகள் ஆரோக்கியமான நன்மைகளை கொண்டிருக்கும் போதிலும் அது இரத்த சர்க்கரையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. எனவே மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மக்கானா குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டிருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இரத்த சர்க்கரை அளவில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் உங்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் மக்கானாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.