- Home
- உடல்நலம்
- Liver Cirrhosis : லிவர் சிரோசிஸ் பற்றி தெரியுமா? உயிரைக் கொல்லும் ஆபத்தான நோய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Liver Cirrhosis : லிவர் சிரோசிஸ் பற்றி தெரியுமா? உயிரைக் கொல்லும் ஆபத்தான நோய் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தற்போதைய காலத்தில் பலரது உயிரை குடித்து வரும் லிவர் சிரோசிஸ் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

What is Liver Cirrhosis?
தற்போதைய காலத்தில் யாருக்கு என்ன நோய் வருகிறது என்பதை கணிக்க முடியாத சூழல் இருக்கிறது. குறிப்பாக பலரும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர். கல்லீரல் பாதிப்பு குறித்து பலருக்கும் விழிப்புணர்வு இல்லை. பலரையும் பாதித்து வரும் லிவர் சிரோசிஸ் என்பது ஒரு தீவிரமான நோயாகும். ஆரோக்கியமான கல்லீரலில் திசுக்கள் படிப்படியாக வடுக்களாக மாற்றப்பட்டு, கல்லீரலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, இறுதியில் கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம். இதுவே லிவர் சிரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கான சிகிச்சைகள் என்ன? இதை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
லிவர் சிரோசிஸ் என்றால் என்ன?
மனித உடலின் ராஜ உறுப்பு என்று கல்லீரல் அழைக்கப்படுகிறது. இது உள் உறுப்புகளிலேயே மிகப்பெரிய பாகம் ஆகும். உணவை செரிப்பது, நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது, முக்கியமான புரதங்களை உற்பத்தி செய்வது, இரத்தம் உறைதலுக்கு தேவையான காரணிகளை உருவாக்குவது என உடலுக்குத் தேவையான பல செயல்பாடுகளை செய்கிறது. ஆனால் கல்லீரலில் ஏதாவது சேதம் ஏற்படும் பொழுது, அது கல்லீரலின் செயல்பாட்டை சிறிது சிறிதாக பாதிக்க துவங்குகிறது. ஒரு கட்டத்தில் இந்த நிலை முற்றி, கல்லீரல் சுருங்கி கரடு முரடானதாகவும், கடினமானதாகவும் மாறிவிடுகிறது. இந்த நிலைக்கு சிரோசிஸ் என்று பெயர். சேதப்பட்ட கல்லீரலின் மேம்பட்ட கட்டத்தை சிரோசிஸ் என அழைக்கின்றனர். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
லிவர் சிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
லிவர் சிரோசிஸில் நான்கு வகையான நிலைகள் உள்ளன. ஆரம்ப நிலை, மேம்பட்ட நிலை, ஈடு செய்யப்பட்ட நிலை, ஈடு செய்யப்பட முடியாத நிலை என்று நான்கு நிலைகள் உள்ளன. இதில் கடைசி நிலையை அடைந்தவர்களுக்கு கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் புற்றுநோய் போன்ற ஆபத்துகள் அதிகம். அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். பொதுவாக லிவர் சிரோசிஸ் ஏற்படுவதற்கு நீண்டகால மது அருந்துதல் முக்கிய காரணமாக இருக்கிறது. மஞ்சள் காமாலை வைரஸின் பிரிவுகளான ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி போன்ற தொற்றுகள் கல்லீரலில் நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தி சிரோசிஸ்க்கு வழிவகுக்கலாம். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வது ஆகியவையும் சிரோசிஸ் உருவாக காரணமாகும்.
லிவர் சிரோசிஸ் அறிகுறிகள் என்ன?
குடும்பத்தில் ஏற்கனவே யாருக்கேனும் இந்த பாதிப்பு இருப்பது, பரம்பரை நோய்கள், கல்லீரலில் இரும்பு அல்லது தாமிரம் போன்ற பொருட்கள் அதிகமாக சேர்வது, பித்தநாளங்கள் அடைபடுதல், சேதமடைதல் சில வகையான மருந்துகள், இதய செயலிழப்பு போன்றவையும் கல்லீரல் செயல்படாமல் போவதற்கு காரணமாக அமையலாம். லிவர் சிரோசிஸ் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் காட்டாது. நோய் முற்றிய நிலையிலேயே அறிகுறிகள் தென்படும். அதிக சோர்வு, பலவீனமாக உணர்வது, பசி இல்லாமல் இருப்பது, விவரிக்க முடியாத அளவிற்கு எடை இழப்பது, குமட்டல் அல்லது வாந்தி, வயிற்று வலி, தோலில் அரிப்பு, மஞ்சள் காமாலை, கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுதல், கால்கள் மற்றும் வயிற்றில் திரவம் சேர்தல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
லிவர் சிரோசிஸை தடுக்கும் முறைகள்
லிவர் சிரோசிஸை குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் முன்னேற்றத்தை குறைக்கலாம். மது அருந்துவதை நிறுத்துவது, ஹெபடைடிஸ் பி அல்லது சி வைரஸ் தொற்றுகளுக்கு தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது, ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைப்பது, நீரிழிவு மற்றும் கொழுப்பை கட்டுப்படுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட நான்காவது நிலையை அடைந்தவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரு வழியாகும். ஆரோக்கியமான கல்லீரலை மாற்றுவதன் மூலம் ஒரு நோயாளியின் உயிரை காப்பாற்ற முடியும். லிவர் சிரோசிஸ் ஆரம்ப நிலையிலேயே எந்த அறிகுறியும் காட்டாது என்பதால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்
லிவர் சிரோசிஸ் என்பது ஒரு தீவிரமான நிலையாகும். இது நோய் முற்றிய நிலையில் உயிருக்கு கூட ஆபத்தாக முடியும். எனவே இதன் அறிகுறிகளை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது நோயின் முன்னேற்றத்தை குறைத்து வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும். பிரச்சனை சிறியதாக இருக்கும் போது அறிகுறிகளையும் காட்டாது என்பதால் அடிக்கடி உடல் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது ஒரு உயிரை காப்பாற்றவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் உதவும்.