- Home
- உடல்நலம்
- Kitchen Ingredients for Control Blood Sugar : வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்தே சுகரை குறைக்கலாம்.!
Kitchen Ingredients for Control Blood Sugar : வீட்டில் இருக்கும் இந்த பொருட்களை வைத்தே சுகரை குறைக்கலாம்.!
நீரிழிவைக் கட்டுப்படுத்த வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்கள் உதவி புரிகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Kitchen Ingredients for Control Blood Sugar
நீரிழிவு என்பது தற்போதைய காலத்தில் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பலருக்கும் நீரிழிவு பிரச்சனை ஏற்படுகிறது. நீரிழிவுக்காக சாப்பிடும் மருந்துகள் பிற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். நீரிழிவை கட்டுப்படுத்துவதற்கு நம் சமையலறையில் உள்ள சில பொருட்கள் உதவி புரிகின்றன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வெந்தயம்
சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவதில் வெந்தயம் முக்கிய பங்காற்றுகிறது. ஒன்று முதல் இரண்டு ஸ்பூன் அளவுள்ள வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்து விட்டு, வெந்தயத்தை மென்று சாப்பிடலாம். அல்லது முளைகட்டிய வெந்தயத்தை அரைத்து வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். முளைக்கட்டிய வெந்தயத்தை வெயிலில் காயவைத்து பொடி செய்து இரவு உணவுக்கு பின்னர் ஒரு டம்ளர் அருந்தி வரலாம்.
பாகற்காய்
பாகற்காய் சர்க்கரை நோய்க்கான ஒரு பாரம்பரிய தீர்வாக பார்க்கப்படுகிறது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கப் பயன்படுகிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை அரைத்து காலை வெறும் வயிற்றில் சாறு போல குடிக்கலாம். மிகவும் கசப்பாக உணர்பவகள் பாகற்காயை வேகவைத்து அந்த தண்ணீரை அருந்தி வரலாம் அல்லது பாகற்காயை வைத்து சாம்பார், குழம்பு, பொரியல் செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த ஒரு பொருளாகும். இது கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி இன்சுலின் சுரப்பை சீராக்க உதவும். தினமும் காலை எழுந்ததும் இரண்டு பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலை, சிறிதளவு தயிர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து அதன் சாலை வடிகட்டி குடித்து வரலாம். குறிப்பாக நெல்லிக்காய்களின் விதைகளை நீக்காமல் அதையும் சேர்த்து அரைப்பது மிகுந்த பலன்களைத் தரும். நெல்லிக்காய் மற்றும் அதன் விதைகளில் உள்ள துவர்ப்புத் தன்மை சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பெருமளவில் உதவும்.
இலவங்கப்பட்டை மற்றும் மஞ்சள்
இலவங்கப்பட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூளை தேநீரில் சேர்த்து அருந்தி வரலாம் அல்லது இலவங்கப்பட்டையை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து அதை தேநீர் போல அருந்தி வரலாம். இலவங்கப்பட்டையை போலவே மஞ்சளுக்கும் இன்சுலின் சுரப்பை மேம்படுத்தும் தன்மை உண்டு. எனவே உங்கள் உணவில் மஞ்சள் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரவு படுப்பதற்கு முன்னர் பாலுடன் மஞ்சள் தூள் சேர்த்து அருந்தி வரலாம். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் நோய் தொற்றுகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கும்.
வேப்பிலை மற்றும் துளசி இலைகள்
வேப்பிலை மற்றும் துளசி இலைகள் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் இளம் தளிர்களாக இருக்கும் 10 வேப்பிலைகள் மற்றும் 10 துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். அதே போல் கறிவேப்பிலையும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்பதால் உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். கறிவேப்பிலை, வெந்தயம், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து கஷாயம் போல செய்து குடிக்கலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளி விதைகள் ஆகியவையும் உணவில் சேர்ப்பது சர்க்கரை அளவை நிலையாக வைத்திருக்க உதவும்.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் குறிப்புகள்
இது மட்டுமல்லாமல் கோவக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, வெங்காயம் போன்ற உணவுகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, கேழ்வரகு, ஓட்ஸ், பிரவுன் ரைஸ் ஆகிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளும் இரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சுவதை தாமதப்படுத்துவதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. சர்க்கரை, வெல்லம், மாவுச் சத்து நிறைந்த உணவுகள், இனிப்பு பண்டங்கள் ஆகியவற்றை தவிர்த்து விட வேண்டும். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி, யோகா, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றை மேற்கொள்ளுதல் வேண்டும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருப்பதும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். எனவே போதுமான அளவு நீர் அருந்துதல் வேண்டும்.
மருந்து, மாத்திரைகளை நிறுத்துதல் கூடாது
மேற்குறிப்பிட்ட வைத்தியங்கள் நீரிழிவு நோய்க்கான துணை சிகிச்சையாக மட்டுமே கருதப்பட வேண்டும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை படி மருந்துகள் மற்றும் உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியம். சுய மருத்துவம் செய்வது ஆபத்தானது. மருந்து மாத்திரைகளுடன் மேற்குறிப்பிட்ட முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் மருந்து மாத்திரைகளை நிறுத்துதல் கூடாது.