- Home
- உடல்நலம்
- Meen Kuzhambu: மீன் குழம்பை எத்தனை நாள் வைத்து பயன்படுத்தலாம்? ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாதா?
Meen Kuzhambu: மீன் குழம்பை எத்தனை நாள் வைத்து பயன்படுத்தலாம்? ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாதா?
மீன் குழம்பை பலரும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வைத்து சூடாக்கி சாப்பிடுவார்கள். இது சரியான முறையா? மீன் குழம்பை பிரிட்ஜில் வைத்து அதிக நாட்கள் பயன்படுத்தலாமா? என்பது குறித்து பார்க்கலாம்.

மீன் குழம்பு (Fish Gravy)
அசைவப் பிரியர்களுக்கு கடல் உணவுகள் மிகப் பிடித்தமான ஒரு உணவாகும். குறிப்பாக மீன் உணவுகள் பலருக்கும் விருப்பமான தேர்வாக இருக்கிறது. நமது இல்லங்களில் மீன் குழம்பை பல நாட்கள் வரை வைத்து சாப்பிடுவது வழக்கம். முதல் நாள் வைத்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். ஆனால் சிலர் மீன் குழம்பை ஒருநாள் சமைத்துவிட்டு, அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்கள் கூட வைத்து சாப்பிடுகின்றனர். இது சரியான முறை தானா? அவ்வாறு சாப்பிட்டால் ஏதாவது பின் விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து இங்கு காணலாம்.
மீன் குழம்பை ஃப்ரிட்ஜில் வைக்கலாமா?
மீன் குழம்பை தாராளமாக ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம். மீன் போன்ற உணவுகள் அறை வெப்ப நிலையில் விரைவில் கெட்டு விடும் என்பதால் அதை சமைத்த பிறகு ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லது. இது குழம்பை பாதுகாப்பதுடன், மீன் அழுகி துர்நாற்றம் வீசுவதையும் தடுக்கும். ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன்பாக குழம்பை நன்றாக ஆற விட வேண்டும். அதன் பின்னர் ஒரு காற்று புகாத பாத்திரத்தில் மாற்றி மூடி வைக்க வேண்டும். சூடான குழம்பை நேரடியாக ஃப்ரிட்ஜில் வைத்தல் கூடாது. அது மற்ற உணவுகளையும் பாதித்து ஃப்ரிட்ஜில் செயல் திறனையும் குறைக்கும்.
எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?
ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட மீன் குழம்பை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை பாதுகாப்பாக வைத்து சாப்பிடலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்த பின்னர், குழம்பு அறை வெப்ப நிலைக்கு வந்த பின்னர் மீண்டும் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். புதிதாக சமைத்த மீன் குழம்பை அன்றைய தினமே சாப்பிடுவது நல்லது. இரண்டாவது நாள் சாப்பிடுவதற்கு முன்னர் குழம்பை நன்றாக சூடுபடுத்தி மீன் கெட்டுப் போகவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு சாப்பிடலாம். மூன்றாவது நாள் சாப்பிடுவதற்கு முன்னர் குழம்பில் புளித்த வாடை வருகிறதா? மீன் துண்டுகளில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? வித்தியாசமான வாடை வருகிறதா? என்பதை கவனித்து சாப்பிட வேண்டும்.
மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக்கூடாது
ஒவ்வொரு முறையும் குழம்பை பிரிட்ஜில் இருந்து எடுத்து சூடு படுத்தும் பொழுது ஒருமுறை மட்டுமே சூடு படுத்த வேண்டும். சூடுபடுத்திய குழம்பை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துதல் கூடாது. மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் அதன் சுவை மற்றும் சத்துக்கள் குறையக்கூடும். குழம்பை கரண்டியால் எடுக்கும் பொழுது சுத்தமான ஈரம் இல்லாத கரண்டியை பயன்படுத்த வேண்டும். ஈரமான கரண்டியை பயன்படுத்தினால் குழம்பு சீக்கிரம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. மீன் குழம்பை சேமிப்பதற்கு கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். காற்று மற்றும் ஈரப்பதத்தை உள்ளே அனுமதிக்க கூடாது. ஃப்ரிட்ஜ் 0-4 டிகிரி செல்சியஸ் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
குழம்பை முறையாக சேமிக்கும் முறை
மீன் குழம்பில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள், புளி, எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவை இயற்கையாகவே பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கும். தமிழ்நாட்டு பாணியில் வைக்கப்படும் மீன் குழம்பில் புளி மற்றும் மசாலாக்கள் அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன்னர் மீன் துண்டுகளை தனியாக வைத்துவிட்டு குழம்பை மட்டும் சேமித்தால் மீன் துண்டுகள் நீண்ட நேரம் குழம்பில் ஊறுவதால் ஏற்படும் அமைப்பு மாற்றத்தை தவிர்க்கலாம். மீன் குழம்புகளை அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை பாதுகாப்பாக சேமித்து உண்ணலாம். ஆனால் 3 நாட்களுக்குள் குழம்பில் நிற மாற்றங்கள் அல்லது கெட்ட வாடை வந்தால் சாப்பிடுவது கூடாது. குழம்பின் வாசனை, நிறம் மற்றும் அமைப்பை சரிபார்த்து பாதுகாப்பு முறைகளை பின்பற்றி சாப்பிடலாம்.