- Home
- உடல்நலம்
- Weight Loss : இட்லி vs தோசை: ரெண்டும் ஒரே மாவா இருந்தாலும் எடை குறைய சிறந்தது எது தெரியுமா?
Weight Loss : இட்லி vs தோசை: ரெண்டும் ஒரே மாவா இருந்தாலும் எடை குறைய சிறந்தது எது தெரியுமா?
இட்லி மற்றும் தோசை இரண்டும் ஒரே மாவில் செய்தாலும் எடை குறைய, செரிமானம் மேம்பட எது சிறந்தது என இங்கு விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இட்லி அல்லது தோசை தான் பரிமாறப்படும். அதிலும் தென்னிந்தியர்களான தமிழர்களின் உணவில் பல வடிவங்களில் அரிசி உணவுகள் இடம் பெறுகின்றன. அதில் தவிர்க்க முடியாததாக இட்லியும் தோசையும் உள்ளது. இரண்டுமே ஒரே மாதிரியான புளித்த அரிசி மாவிலிருந்து செய்யக்கூடிய உணவாக இருந்தாலும், வெவ்வேறு வகையான ஊட்டச்சத்துக்களையும், கலோரியையும் கொண்டுள்ளன. இந்தப் பதிவில் எடையை குறைக்க இட்லி அல்லது தோசை இரண்டில் எதை உண்பது ஆரோக்கியமானது என்பதை காணலாம்.
கலோரிகள்
கலோரிகள் என்பது நாம் உண்ணும் உணவில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆற்றல் அளவை குறிக்கிறது. உதாரணமாக எடையை குறைக்க நினைக்கும் ஒரு நபருக்கு 1500 கலோரிகள் தேவைப்படுகிறது எனில், அதிலிருந்து சற்று குறைவாக உண்ணும்போது தான் (1400 கலோரிகள்) எடை குறைய தொடங்குகிறது.
40 முதல் 50 கிராம் கொண்ட இட்லியில் சுமார் 39–45 கலோரிகள் இருக்கலாம். ஒரு தோசையில் 80 முதல் 100 கிராம் வரை இருக்கலாம். இது சுமார் 120–150 கலோரிகளாகும். இட்லி, தோசை ஆகிய இரண்டையும் சமைக்கும் முறை வித்தியாசப்படுவதுதான் இதற்கு காரணம். பொதுவாக இட்லிகள் ஆவியில் வேகவைக்கப்படுகின்றன. அவற்றிற்கு எண்ணெய் அவசியம் இல்லை. ஆனால் தோசை சுடும்போது நெய் அல்லது எண்ணெய் சேர்க்கப்படுகிறது. அதனால் கலோரிகள் அதிகமாகின்றன.
சமையல் முறை
இட்டியை ஆவியில் வேக வைக்கும்போது அதனுடைய ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும். கொழுப்பு அதிகரிப்பதில்லை. ஆனால் தோசை மொறுமொறுப்பாக வரவேண்டும் என அதிகப்படியான நெய் அல்லது எண்ணெய் சேர்ப்பதால் அதில் கொழுப்பு சேருகிறது.
இட்லி சாதரணமாகவே எடை இழப்புக்கு ஏற்றது. ஆனால் தோசையை இழப்புக்கு சாப்பிட வேண்டும் என்றால் தோசை மாவில் பச்சைப் பயிறு, ஓட்ஸ், ராகி அல்லது குயினோவாவைச் சேர்க்கலாம். இவை நார்ச்சத்து, புரதத்தை அதிகரிக்கும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும்.
இரண்டு உணவுமே புரோபயாடிக்குகள் நிறைந்தது. இது செரிமானம், வளர்சிதை மாற்றத்திற்கு உதவும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் எடையை சீராக பராமரிக்க முடியும். இட்லி குறைந்த கலோரிகள் கொண்டது. எடை இழப்புக்கு ஏற்றது. ஆனாலும் குறைந்த எண்ணெய்யுடன் நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளுடன் எடுத்துக் கொள்ளும்போது தோசையும் எடை இழப்புக்கு உதவும். நாம் எடுத்துக் கொள்ளும் அளவும், விதமும் தான் எடை குறைப்புக்கு உதவுகிறது என்பதை மறுக்க முடியாது. தோசையைவிட இட்லி சிறந்த தேர்வாக இருக்கும்.