Healthy Habits : நீங்க 60 வயதில் ஆரோக்கியமா இருக்கனுமா? அப்போ 30 வயசுல இதை ஆரம்பிங்க!!
உங்களுடைய 60 வயதில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் 30 வயதில் சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

Healthy Habits in Your 30s
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் உண்மையில் அதற்கான செயல்களில் கவனம் செலுத்தினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு இளமையான பருவத்தில் சில விஷயங்களை செய்ய வேண்டும். சில விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உங்களுடைய 30 வயதுகளில் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் முதுமைக் காலத்தில் நோயின்றி வாழலாம். இந்தப் பதிவில் உங்களுடைய 60 வயதில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் 30 வயதில் எந்தெந்த விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என காணலாம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி எடை குறைப்புக்கு என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உடலை வலுவாக்கவும், நெகிழ்ச்சித்தன்மையுடன் வைத்திருக்கவும் உதவுகிறது. காலையில் எழுந்த பின் உடற்பயிற்சி செய்வதால் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க முடியும். இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்.
மரபு வழி நோய்கள்
ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைசெய்து கொள்ளுங்கள். உங்களுடைய உடல்நலம் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்வது நல்லது. தொடக்கத்திலே நோய் அறிகுறிகளை அறிந்தால் சிகிச்சை எடுத்து குணப்படுத்தக் கூடிய நோய்கள் பல உண்டு. உங்களுக்கு குடும்ப மரபு வழியாக ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது நல்லது. அதற்கான பரிசோதனைகளையும் செய்து கொள்ளுங்கள். இதனால் வரும்முன் தடுக்கலாம்.
மன அழுத்தம்
மன அழுத்தம் உடல்நலத்தின் எதிரி. அதை சரியாக கையாள வேண்டும். 30 வயதில் குடும்ப பொறுப்புகள், வேலை என மன அழுத்தம் அதிகரிக்கலாம். அதை முறையாக கட்டுப்படுத்தினால் வயதான காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை தவிர்க்கலாம். ஏனென்றால் மன அழுத்தமும், மனச்சோர்வுமே 77% நோய்களுக்கு காரணமாக இருக்கிறதாம்.
பிட்னஸ்
உடலை ஆரோக்கியமாக வைக்க ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிட வேண்டும். உயரத்திற்கு ஏற்ற உடல் எடையே ஆரோக்கியம். எடை அதிகரித்தால் நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை தலைதூக்கும். அதனால் உடல் பருமன் அதிகரித்தால் அதை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
உறுதியான எலும்புகள்
30 வயதில் எலும்புகள் தேய்மானம் அடைய தொடங்கும். பலவீனமாகும் எலும்புகளை உறுதியாக்க அதற்கு ஏற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். வைட்டமின் டி, கால்சியம் உணவுகளஒ எடுத்து கொள்ள வேண்டும். நாள்தோறும் வலிமை உடற்பயிற்சிகள் செய்வது எலும்புகளை உறுதியாக்கும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உங்களுடைய தசைகளையும் எலும்புகளையும் வலுவாக வைத்திருக்க உதவும். இதனால் 60 வயதில் நீங்கள் தடுமாறாமல் சமநிலையில் நடக்க உதவியாக இருக்கும்.
சரும ஆரோக்கியம்
உங்களுக்கு வயதாகிவிட்டது என்பதை சருமம் தான் முதலில் காட்டி கொடுக்கிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் வயதின் இன்னொரு அறிகுறி. 30 வயதிலிருந்து நன்றாக தண்ணீர் குடிப்பது, நன்றாக தூங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தினால் உங்களுடைய சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். இளமையான சருமம் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும்.
தவிருங்கள்!
சர்க்கரை மட்டுமல்ல அளவுக்கு அதிகமான உப்பும் டேஞ்சர். அதனுடைய அளவையும் குறைக்க வேண்டும். 30 வயதுக்கு பின் உப்பும், இனிப்பும் குறைத்து கொள்ளுங்கள்.