Mouth Odour: வாய் துர்நாற்றம் இனி இல்லை.. இதோ எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்
வாய் துர்நாற்றம் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை. வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Simple Way to remove mouth odour
வாய் துர்நாற்றத்தை போக்குவதற்காக பலரும் மவுத் பிரஷ்னர் அல்லது மவுத்வாஷ் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்தும் பொழுது வாயில் இருக்கும், குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் இறந்து விடுகின்றன. இது மட்டுமல்லாமல் மவுத் வாஷில் இருக்கும் காரத்தன்மை காரணமாக வாயில் அடிக்கடி புண்கள் உருவாகும். வாய் துர்நாற்றம் அதிகமாக இருப்பவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வறண்டு வாயும் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். அதிக அளவு தண்ணீர் குடிப்பது எச்சில் சுரப்பை அதிகரித்து வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் உணவுத் துகள்களை அகற்றும். இதன் காரணமாக வாய் துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளித்தல்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து இந்த நீரால் வாயை கொப்பளிக்கவும். இது ஒரு சிறந்த கிருமி நாசினி ஆகும். இது வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவும். தினமும் காலை எழுந்ததும் நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை செய்ய வேண்டும். இதன் காரணமாக வாய் துர்நாற்றம் குறையும். புதினா இலைகளை மென்று சாப்பிடுவது அல்லது கிராம்பு ஏலக்காயை வாயில் போட்டு சுவைத்து அதன் உமிழ் நீரை விழுங்குவது ஆகியவை காரணமாகவும் வாய் துர்நாற்றம் நீங்கும். வாய் புத்துணர்ச்சி அடையும். இவை இயற்கையான நறுமணப் பொருட்கள் என்பதால் பின் விளைவுகளும் இல்லை.
நாக்கை சுத்தப்படுத்துதல்
நாக்கின் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள், உணவுத் துகள்கள் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே ஒரு நாக்கு வழிப்பானை வைத்து அல்லது டூத் பிரஷின் பின்பகுதியை பயன்படுத்தி தினமும் நாக்கின் மேற்பகுதியில் படர்ந்து இருக்கும் வெள்ளை படலத்தை மெதுவாக வழுப்பது வாய் துர்நாற்றத்தை கணிசமாக குறைக்கும். காலை மற்றும் இரவு படுக்க செல்வதற்கு முன்னர் இரண்டு வேளையாவது பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையில் உள்ள சிக்கிய உணவுத் துகள்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே வாரம் ஒருமுறை ஃப்ளாஸ் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக பற்களுக்கு இடையில் சிக்கிய துகள்கள் அகற்றப்படுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.
மசாலாப் பொருட்களை தவிர்த்தல்
ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து காலை உணவுக்கு முன்பாக வாய் கொப்பளித்து வரலாம். இது வாயின் pH சலவை சமநிலைப்படுத்தும். வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும். இது மட்டுமல்லாமல் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் போன்ற பழங்களை அதிக அளவு எடுத்துக் கொள்ளலாம். இது எச்சில் சுரப்பை அதிகரிக்கும். இந்த எச்சிலானது துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவும். சில உணவுகள் வாய் துர்நாற்றத்தை தற்காலிகமாக ஏற்படுத்தலாம். வெங்காயம், பூண்டு போன்ற பொருட்களை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கும் என்பதால் புகைபிடித்தல், மது அருந்துதல் பழக்கத்தை கைவிட வேண்டியது அவசியம்.
மருத்துவ ஆலோசனை அவசியம்
குடலில் ஏற்படும் புண்களும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாகும். எனவே வயிறு மற்றும் குடல் பகுதிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். இந்த வீட்டு வைத்தியங்கள் வாய் சுகாதாரத்தை பேணுவதோடு துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும் உதவும். ஆனால் துர்நாற்றம் தொடர்ந்தால் பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது முக்கியம். பற்சிதைவு, ஈறு நோய்கள் அல்லது பிற காரணங்கள் காரணமாகவும் வாய் துர்நாற்றம் ஏற்படலாம்.