பெண்களே உடற்பயிற்சிக்கு நேரமில்லையா? வெறும் '2' பயிற்சிகள் போதும்!!
உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாவிட்டாலும் வெறும் இரண்டு பயிற்சிகள் செய்தால் பெண்களின் ஆரோக்கியத்தில் மேம்பாடு ஏற்படும்.

Here Doctor Explain Simple Weekly Routine For Women With Just 2 Exercises : உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் வலிமையாக இருப்பதும் உடற்பயிற்சி செய்வதற்கான முக்கிய காரணங்களாகும். சிலர் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உடல் அமைப்பைக் கட்டுக்கோப்பாக வைக்கவும் உடற்பயிற்சி செய்வார்கள். ஆனால் எல்லோராலும் உடற்பயிற்சிக்காக தனியாக நேரத்தை ஒதுக்க முடியவதில்லை. குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள் என நொந்துகொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு உடற்பயிற்சிக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் 30 நிமிடங்களாவது ஏதேனும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த நிலையில் வாராந்திர பழக்கமாக 2 பயிற்சிகளை பெண்கள் பயிற்சிசெய்வது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்
பிரபல எழுத்தாளர் மெல்ராபின்ஸ் தன்னுடைய போட்காஸ்டில் ஆர்த்தோபீடிக் சர்ஜன் (Orthopaedic Surgeon) டாக்டர் வோண்டா ரிட்டிடம் பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து கேட்ட கேள்விக்கு அவர் இரண்டு விதமான உடற்பயிற்சிகளை அவர் பரிந்துரைத்தார். அவை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கக் கூடியது. பிசியான வாரங்களில் பெண்கள் இந்த விஷயங்களை செய்யலாம்.
நடைபயிற்சி:
நடைபயிற்சி என்பது உங்களை நகர்த்தும் எளிமையான பயிற்சியாகும். நீங்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையை கொண்டவராக இருந்தால் அதை மாற்றுவதற்கு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நடைபயிற்சி சிறந்த தேர்வாகும். உங்களுடைய பிசியான நாட்களில் நடப்பதற்கு நேரத்தை ஒதுக்குவது மனதை அமைதியாகவும் இலகுவாகவும் உணரச் செய்யும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 3 மணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்லது. இந்த மூன்று மணி நேரத்தை 45 நிமிட அமர்வுகளாக பிரிக்கலாம். ஒரு வாரத்தில் ஏழு நாட்களில் நான்கு நாட்கள் வேகமான நடைபயிற்சி செய்ய வேண்டும். இது உங்களுடைய உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் தசைகளையும் வலிமையாக்கும்.
பளு தூக்குதல்:
பெண்களைப் பொறுத்தவரை பலர் வலிமை பயிற்சிகளை தவிர்க்கிறார்கள். பளு தூக்குதல் ஆண்களுக்கானது என பல பெண்களின் மனதில் ஒரு எண்ணம் உள்ளது. ஆனால் பல் தூக்குதல் பயிற்சி பெண்களின் உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வாரத்தில் இரண்டு முறையாவது அதிகமான எடைகளை தூக்கி பழகவேண்டும். முதலில் குறைந்த எடைகளைத் தூக்கி பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக உங்களுடைய எடைகளை அதிகரிக்கலாம். வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் எடை பயிற்சிகளை செய்யலாம்.
வெறும் 2 பயிற்சிகள்
உடற்பயிற்சிக்கு என்று ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என ஒதுக்க தேவையில்லை. உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் காலையில் 10 நிமிடங்கள், மதியம் 10 நிமிடங்கள், இரவில் 10 நிமிடங்கள் என பிரித்து மூன்றாம் அமர்வுகளாக முப்பது நிமிடங்கள் நடப்பது போதும். வாரத்தில் இரண்டு நாட்களாவது எடைகளுடன் கூடிய பயிற்சியை செய்ய 30 நிமிடங்கள் அல்லது குறைந்தபட்சம் 15 நிமிடங்களை ஒதுக்கலாம். 3-3-3 விதியை பின்பற்றலாம். மூன்று வெவ்வேறு பயிற்சிகள், மூன்று செட்டுகள் செய்வதே 3-3-3 விதியாகும். இது உங்களுடைய ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். தொடக்கத்தில் சற்று கடினமாக இருந்தாலும் இந்த பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் மிகவும் எளிதாகிவிடும்.