- Home
- உடல்நலம்
- Aadathodai health benefits : ‘நுரையீரலின் பாதுகாவலன்’ ஆடாதொடையின் மகத்துவம் என்ன தெரியுமா?
Aadathodai health benefits : ‘நுரையீரலின் பாதுகாவலன்’ ஆடாதொடையின் மகத்துவம் என்ன தெரியுமா?
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகை தாவரமான ஆடாதொடை ‘நுரையீரலின் பாதுகாவலன்’ என்று அழைக்கப்படுகிறது. சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆடாதொடை நிரந்தர தீர்வு தருகிறது.

Health Benefits of Aadathodai
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சித்த மருத்துவம் என்பது பல நூற்றாண்டுகளாக தமிழர்களால் பின்பற்றி வரும் ஒரு மருத்துவமாகும். இயற்கையாக கிடைக்கும் தாவரங்களின் மருத்துவ குணங்களை அறிந்து அதை மருந்துகளாக்கி பயன்படுத்துவதே இந்த மருத்துவத்தின் சிறப்பு. அந்த வகையில் சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் ஆடாதொடை முக்கிய மூலிகையாக விளங்கி வருகிறது. இதன் இலைகள், பூக்கள், பட்டைகள், வேர்கள் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இந்த இலைகளை ஆடுகள் தொடாது எனவே இவை ஆடாதொடை என பெயர் பெற்றது. ஆடாதொடையின் முக்கிய மருத்துவ பயன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆடாதொடையின் மருத்துவ பண்புகள்
ஆடாதொடை சளியை அகற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளில் தேங்கியுள்ள கெட்டிப்பட்ட சளியை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. நெஞ்சு சளி, கோழைக்கட்டு, வறட்டு இருமல், கக்குவான் இருமல் போன்றவற்றிற்கு ஆடாதொடை சிறந்த தீர்வு தருகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், இளைப்பு, மார்பு சளி போன்றவற்றை ஆடாதொடை குறைக்கிறது. ஆடாதொடை கொண்டு கசாயம் செய்து குடிப்பது ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. நாள்பட்ட சைனஸ் பிரச்சினைகள் உள்ளவர்கள், மூக்கடைப்பு, தும்மல் தலையில் நீர் கோர்த்தல் ஆகிய பிரச்சனை உள்ளவர்களுக்கும் ஆடாதொடை தீர்வு தருகிறது. தொண்டை வலி, தொண்டை கட்டு போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த மூலிகையை பயன்படுத்தலாம்.
சிறந்த கிருமிநாசினியாக விளங்கும் ஆடாதொடை
இந்த இலைகளுக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உண்டு. இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். இந்த இலைகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை உண்டு. உடலில் ஏற்படும் புண்களுக்கு ஆடாதொடையை பயன்படுத்தலாம். இரத்தப்போக்கு கோளாறுகளுக்கும் இந்த இலைகள் சிகிச்சை அளிக்க உதவுகிறது. வயிறு மற்றும் சிறுகுடல் புண்களை ஆற்றும் தன்மையும் கொண்டுள்ளது. இதில் கிருமி நாசினி பண்புகள் இருப்பதால் காயங்களை குணப்படுத்துவதிலும், சீழ் புடிக்கும் புண்களை ஆற்றவும் பயன்படுகிறது. ஆடாதொடையை சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிற்றில் உள்ள பூச்சிகள், பாக்டீரியாக்கள் கொல்லப்படுகிறது. இது செரிமான மண்டலத்தை மேம்படுத்தி குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது.
ஆடாதொடையை எப்படி சாப்பிட வேண்டும்?
ஆடாதொடை இலைகளை விளக்கெண்ணையில் லேசாக வதக்கி தசை வலி இருக்கும் இடங்களில் ஒற்றிடம் கொடுக்கலாம். இது உடலில் உண்டாகும் தசை வலிகளை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. ஆடாதொடை இலைகளை காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுத்தால் உடல் வலி நீங்கும். ஆடாதொடை இலை சாற்றை தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த கொதிப்பு குணமாகும் என கூறப்படுகிறது. சித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கும் ஆடாதொடை பயன்படுகிறது. இது சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. ஆடாதொடை சாற்றை முகத்தில் பயன்படுத்தி வரும் பொழுது அடைப்பட்ட துளைள் நீங்கும். வயதான அறிகுறிகளை குறைக்கவும் உதவும். ஆடாதொடை இலைகளை நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கஷாயமாக அருந்தலாம். தேன், மிளகு, திப்பிலி போன்றவற்றை சேர்த்தும் பயன்படுத்தலாம்.
மருத்துவ ஆலோசனை தேவை
ஆடாதொடை ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும். இதை கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் நாள்ப்பட்ட நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு மருத்துவத்தை தொடங்குவதற்கு முன்னரும் தகுதியான மருத்துவர் அல்லது நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம். சரியான அளவு மற்றும் பயன்பாட்டு முறை மிகவும் முக்கியமாகும். மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்கள் மற்றும் சித்த மருத்துவர்களின் வீடியோக்களின் அடிப்படையிலானது மட்டுமே. இதற்கு ஏசியாநெட் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.