- Home
- உடல்நலம்
- World Lung Cancer Day: இந்த ஆபத்தான அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.! நுரையீரல் புற்றுநோயா இருக்கலாம்
World Lung Cancer Day: இந்த ஆபத்தான அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.! நுரையீரல் புற்றுநோயா இருக்கலாம்
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

World Lung Cancer Day 2025
முந்தைய காலத்தில் பலருக்கும் அரிதாக ஏற்பட்டு வந்த புற்றுநோயானது தற்போதைய காலத்தில் சகஜமான நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது. மிகவும் கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோயும் ஒன்று. உலக அளவில் அதிக இறப்புக்கு காரணமான ஒன்றாகவும் விளங்கி நுரையீரல் புற்றுநோய் விளங்கி வருகிறது. நுரையீரல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலக மக்களை திரட்டி இந்த நோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவும் உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் ஏற்பட பல்வேறு காரணிகள் கூறப்படுகிறது. அவை குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நுரையீரல் புற்றுநோயின் இருவகைகள்
நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரல் திசுக்களில் ஏற்படும் புற்று நோயாகும். புகைப்பிடித்தல், காற்று மாசுபாடு, மரபியல் மற்றும் சில ஆபத்தான ரசாயனங்களுக்கு ஆட்படுதல் ஆகியவை நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. நுரையீரல் புற்றுநோய் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது. சிறிய செல் அல்லாத முறை புற்றுநோய் மற்றும் சிறிய செல் புற்று நோய் என்று இரு வகைப்படும். ‘சிறிய செல் அல்லாத நுரையீரல் புற்றுநோய்’ மிகவும் பொதுவான, சுமார் 85% நோயாளிகளுக்கு இது கண்டறியப்பட்டுள்ளது. இது மெதுவாக வளரும் மற்றும் பிற வகைகளை விட சிகிச்சைக்கு எளிதாக பதிலளிக்கும். இதில் அடினோ கார்சினோமா, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா, லார்ஜ் செல் கார்சினோமா என்கிற துணை வகைகள் உள்ளன. அடுத்த வகையான ‘சிறிய செல் நுரையீரல் புற்றுநோய்’ என்பது மிக வேகமாக வளர்ந்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடிய புற்றுநோயாகும். இது பெரும்பாலும் அதிக அளவு புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த வகைக்கு பெரும்பாலும் கிமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள்
நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது சவாலான காரியம் ஆகும். இதன் அறிகுறிகள் ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியாது. நோய் முற்றிய நிலையிலேயே சில அறிகுறிகள் தென்படுத்துவங்கும். சளி இல்லாத சமயங்களிலும் இருமல் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். நீண்ட நாட்களாக இருமல், சில நேரங்களில் ரத்தத்துடன் சளி கலந்து வருதல், மார்பில் வலி, மூச்சு விடுவதில் சிரமம் அல்லது சுவாசிப்பதில் குறைபாடு ஏற்படுதல், விளக்க முடியாத எடை இழப்பு, தொடர்ச்சியான சோர்வு, குரலில் மாற்றம் ஆகியவை நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறிகள் ஆகும். நுரையீரல் புற்று நோய்க்கு முதன்மை காரணம் நேரடியாக புகை பிடிப்பவர்கள் மட்டுமல்ல, பிறர் பிடிக்கும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் இந்த நோய் ஏற்படுகிறது. மண்ணிலிருந்து வெளிப்படும் ரேடான் என்கிற கதிரியக்க வாயுவை சுவாசிப்பதும் நுரையீரல் புற்று நோய்க்கு காரணமாகும். சில கனிம இழைகள், நிக்கல், குரோமியம், ஆஸ்பெஸ்டாஸ் போன்ற ரசாயனங்களுக்கு ஆட்படுபவர்களுக்கும் இந்த நோய் ஏற்படலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்
குடும்பத்தில் யாருக்கேனும் நுரையீரல் புற்றுநோய் அபாயம் இருந்தால் அந்த நபருக்கும் ஆபத்து அதிகமாக இருக்கலாம். மார்பு பகுதியில் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றவர்களுக்கும் எதிர்காலத்தில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உண்டு. நுரையீரல் புற்று நோயை மார்பு எக்ஸ்ரே மூலம் ஆரம்ப நிலையில் கண்டறியலாம். சிடி ஸ்கேன் மூலம் நுரையீரலை விரிவாக படம் எடுத்து கட்டியின் அளவு மற்றும் இருப்பிடத்தை கண்டறியலாம். பயாப்ஸி முறையில் நுரையீரலில் இருந்து ஒரு சிறிய திசு மாதிரியை எடுத்து புற்றுநோய் செல்கள் உள்ளதா என்பதை ஆய்வகத்தில் பரிசோதித்து புற்றுநோயை உறுதி செய்யலாம். நுரையீரல் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, இலக்க சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை ஆகிய முறைகள் உள்ளன. இந்த சிகிச்சைகள் தனித்தனியாகவோ அல்லது பலவற்றை இணைத்தோ வழங்கப்படும். புற்றுநோயின் தன்மை புற்றுநோயின் நிலை ஆகியவற்றை பொறுத்து சிகிச்சை முறைகள் வேறுபடலாம்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியம் வேண்டாம்
புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளில் முதன்மையானது தொண்டை வலி. தொடர்ந்து தொண்டை வலி இருப்பவர்கள், உணவை விழுங்கும் பொழுது வலி ஏற்படுதல், தொடர்ச்சியான உடல் வலி, முதுகு, தோள்பட்டை, கைகளில் அதிக வலி ஏற்படுதல், சில சமயங்களில் மார்பு பகுதிகளில் நீண்ட நேரம் அசாதாரண வலி ஏற்படுதல், காரணம் இல்லாமல் எடை இழப்பு ஏற்படுதல் ஆகியவை நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். எனவே இந்த அறிகுறிகளை புறக்கணிக்காமல் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியமான விஷயம் ஆரம்ப கால கண்டறிதல். எனவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்தால், அதை குணப்படுத்தி விட முடியும். புற்றுநோயின் நிலை தீவிரம் அடையும் பட்சத்தில் அது உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்.