பொதுக் கழிப்பறைகளால் ஆபத்தான நோய்கள் ஏற்படலாம்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க..
பொது கழிப்பறை இருக்கையில் பல நோய்களுடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அலுவலகம், வணிக வளாகம் அல்லது பிற பொது இடங்களில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கண்டிப்பாக பொது கழிப்பறையை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். ஆனால் இதனால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பொதுவாக கழிப்பறை இருக்கையில் கிருமிகள் இருக்கும். ஆனால் பொது கழிப்பறை இருக்கையில் பல நோய்களுடன் தொடர்புடைய பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கழிப்பறை இருக்கைகளைப் பயன்படுத்துவதால் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருப்பினும், சில வகையான பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் கழிப்பறை இருக்கைகளில் நீண்ட காலம் வாழலாம். இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் கழிப்பறை இருக்கைகள் போன்ற நுண்துளைகள் இல்லாத பரப்புகளில் 2 அல்லது 3 நாட்கள் உயிர்வாழும்.
குறிப்பாக Escherichia coli என்பது கழிப்பறை இருக்கைகளில் காணப்படும் ஒரு பொதுவான பாக்டீரியா ஆகும். தொற்றினால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். staphylococcus போன்ற பாக்டீரியாக்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நுண்துளை இல்லாத மேற்பரப்புகளை மாசுபடுத்தும். அசுத்தமான கழிப்பறை இருக்கையில் 3 நிமிடங்கள் இருந்தால், தோல் வெடிப்பு அல்லது தொற்று ஏற்படலாம். Shigella போன்ற பாக்டீரியாக்கள் வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அழுக்கான டாய்லெட் இருக்கையை விட சுத்தமான டாய்லெட் இருக்கையை பயன்படுத்தும் போது பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்கள் பொது கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்றால் சில விஷயங்களை நினைவில் கொள்வது அவசியம். கழிப்பறை இருக்கையைப் பயன்படுத்திய பிறகு பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
இதற்காக, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு உங்கள் கைகளை கழுவவும். உங்கள் கைகளை கழுவுவதற்கு முன்பு, வாய் கண்கள், மூக்கு அல்லது பிற உணர்திறன் பகுதிகளை தொடாதீர்கள். மேலும் எந்த உணவையும் உங்கள் கைகளால் தொடாதீர்கள். ஏனெனில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாக்டீரியா எதிர்ப்பு ஆல்கஹால் துடைப்பான்களையும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். பயன்படுத்துவதற்கு முன், கழிப்பறை இருக்கையை தண்ணீர், டிஷ்யூ, சானிடைசர் கொண்டு துடைத்துவிட்டு உட்காரவும்.
எனினும் சிலர் கழிப்பறையை பயன்படுத்த பயப்படுவதால் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பார்கள். சிறுநீர் வெளியேறாமல் இருக்க தண்ணீர் குடிக்காவிட்டாலும் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும். தண்ணீர் குடிக்காமல் இருப்பது உங்கள் உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும். மேலும் உங்கள் உடலில் நச்சுகள் உருவாகும். உடலில் டாக்ஸின்கள் அதிகமாக இருப்பதால், கழிப்பறை இருக்கையில் இருந்து தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.