கன்ட்ரோல் இல்லாமல் சிறுநீர் கசிவு ஏற்படுதா? இந்த பிரச்சனையா கூட இருக்கும்..!!,
கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுவதற்கு இடுப்பு தளத்தில் (pelvic floor) ஏற்படும் உடல்நலக் கோளாறு தான் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
அண்மையில் தோழி ஒருவர் இருமல் வரும்போது சிறுநீர் கசிவதாக சொன்னார். அதைக் குறித்து மருத்துவரிடம் கேட்டபோது அவர் அதை இடுப்பு தள தசை தொடர்பான மருத்துவ பிரச்சனை என்றும் சிகிச்சை அவசியம் என்றும் கூறினார். சிறுநீர் அடக்கமுடியாமல் போவதெல்லாம் நோயா? என்று தோன்றுகிறதா! இந்த பிரச்சனை ஆண்களை விடவும் பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது.
நோய் காரணம்
நம்முடைய இடுப்புத் தளம் (pelvic floor) என்பது சிறுநீர்ப்பை, கருப்பை, குடல் ஆகியவற்றை ஆதரிக்கும் தசைகளின் குழுவாகும். இந்த தசைகள் பலவீனமடையும் போது அவை உள்ளூறுப்புகளை சரியாக ஆதரிக்காது. இதனால் சிறுநீரை அடக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். இப்போது பலவீனமான இடுப்பு தசைகள் இருப்பதைக் குறிக்கும் சில அறிகுறிகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
அறிகுறிகள்
இருமல், தும்மல், சத்தமாக சிரிக்கும்போது, உடற்பயிற்சி செய்யும் போது சிறுநீர் கசிவு ஏற்பட்டால் இடுப்புத் தளம் மிகவும் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். இடுப்புத் தளத் தசைகள் பலவீனமாக இருக்கும்போது, சிறுநீர்ப்பை மீது பாதிப்பு ஏற்படுகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக சிறுநீர் கசியும்.
இடுப்பு தள தசைகள் மலக்குடலையும் ஆதரிக்கின்றன. இவை பலவீனமாக இருந்தால் வாயு, மலத்தை சிறிது நேரம் கூட அடக்கி கொள்ள முடியாது. நீங்கள் கழிவறைக்கு செல்லும் முன் மலம் அல்லது சிறுநீர் கசிந்தால், உங்கள் இடுப்புத் தளம் பலவீனமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: முந்திரி பருப்பில் உள்ள நன்மை, தீமைகள்!!
இடுப்பு தள தசைகள் சிறுநீரகத்தை கட்டுப்படுத்துவதற்கும், சிறுநீரக பையில் சிறுநீரை வைத்திருப்பதற்கும் பொறுப்பாகும். அவை பலவீனமாக இருக்கும்போது சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருக்க முடியாது.
இடுப்புத் தளத்தின் தசைகள் பலவீனமாக இருந்தால், அவை பிறப்புறுப்பு உணர்வையும் பாதிக்கலாம். இதனால் பாலுறவு இன்பம் குறைகிறது என் நிபுணர்கள் சொல்கின்றனர். இடுப்பு தள தசைகள் பலவீனமாக இருந்தால் கருப்பை, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்போது, பிறப்புறுப்பில் தோல் ஆரம்பத்தில் வீங்கும். இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.
இதையும் படிங்க: தினமும் காலையில் ஊறவைத்த நட்ஸ்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!