Amoeba : முன் பின் தெரியாத நீர்நிலைகளில் குளிப்பீர்களா? உங்கள் மூளைக்கு ஆபத்து
முன் பின் அறிமுகம் இல்லாத நீர் நிலைகளில் குளிக்கும் பொழுது அதில் வாழும் அமீபாக்கள் உடலுக்குள் சென்று மூளையை உண்ணத் தொடங்கும். அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

How Serious is Amoeba?
நீர்நிலைகளில் காணப்படும் சில அமீபா இனங்கள் மனிதர்களுக்கு தீவிரமான மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நோய்களை ஏற்படுத்தக் கூடியவை. இவை பொதுவாக அசுத்தமான அல்லது தேங்கியுள்ள நீர் நிலைகளில் வாழ்கின்றன. இவற்றில் மூளையை தாக்கும் நெக்லேரியா ஃபோலேரி மற்றும் குடல் நோய்களை ஏற்படுத்தும் எண்டமீபா ஹிஸ்டோலிட்டிகா ஆகியவை அடங்கும். நெக்லேரியா ஃபோலேரி ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் அரிதானது என்றாலும் மிக ஆபத்தான நோயை ஏற்படுத்தும். இது குளிர்ச்சியான நீரைக் காட்டிலும் வெதுவெதுப்பான அல்லது நன்னீர் நீர்நிலைகளான ஏரிகள், ஆறுகள், அசுத்தமான நீச்சல் குளங்கள், தேங்கிய தண்ணீர் ஆகியவற்றில் காணப்படுகிறது.
மனித மூளையை தின்னும் அமீபா
ஒரு செல் உயிரியான அமீபாக்கள் உறைந்த நீரில் அல்லது உப்பு நீரில் காணப்படாது. இந்த அமீபா அசுத்தமான நீரில் மூழ்கி நீந்தும் பொழுது அல்லது தலைமுழுகும் பொழுது மூக்கு வழியாக மனிதனின் உடலுக்குள் நுழைகிறது. பின்னர் நம் மூளைக்குச் சென்று அங்குள்ள திசுக்களை அழிக்கத் தொடங்குகிறது. இது அசுத்தமான நீரை குடிப்பதால் பரவுவதில்லை. சளி ஜவ்வு வழியாக மூளைக்குள் நுழைந்தால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். மூளைக்குள் நுழைந்த பின்னர் கடுமையான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். ஒன்று முதல் ஏழு நாட்களுக்குள் சில மோசமான அறிகுறிகள் தென்படலாம். கடுமையான தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து இறுக்கம், குழப்பமான மனநிலை, திசை தெரியாமை, வலிப்பு, கண் கூச்சம், மயக்கம் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.
அமீபா எவ்வாறு மனித உடலுக்குள் நுழைகிறது?
நோய் தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்குள் வழக்கமாக ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உயிரிழப்புகள் ஏற்படலாம். சிகிச்சை மிகவும் கடினமானது. அமீபாவால் உயிரிழந்தவர்களின் மரண விகிதம் 97 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. சில அரிதான சமயங்களில் மட்டுமே சிகிச்சைகள் வெற்றி பெற்றுள்ளது. அமீபா நம் உடலுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டுமானால் சந்தேகத்திற்கு இடமான இடங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். முன்பின் தெரியாத நீர் நிலைகளில் இறங்கி குளிக்கக்கூடாது. சூடான தேங்கியுள்ள நன்னீர் நிலைகளில் நீந்துதல் கூடாது. நீந்தும் பொழுது மூக்கை பிடித்துக் கொள்வது அல்லது மூக்கிற்கு கிளிப் அணிந்து கொள்வது அமீபா மூக்கு வழியாக நுழைவதை தடுக்க உதவும்.
குடலை தாக்கும் என்டமீபா ஹிஸ்டோலிட்டிகா வகை
குழாய்களில் வரும் நீரை தூய்மை படுத்தாமல் மூக்கை சுத்தம் செய்ய பயன்படுத்தக் கூடாது. வீடுகளில் சரியாக காய்ச்சிய அல்லது வடிகட்டிய நீரை மட்டுமே மூக்குகளை சுத்தம் செய்ய பயன்படுத்த வேண்டும். பலர் குளிக்கும் நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் மூலமாக அமீபா மூக்கு வழியாக நுழைவதை நம்மால் தவிர்க்க முடியும். என்டமீபா ஹிஸ்டோலிட்டிகா என்கிற குடல் அமீபா நீர் மூலம் பரவும் ஒரு ஒட்டுண்ணி வகையாகும். இது மனிதர்களின் குடலை தாக்கி பல்வேறு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கடுமையான வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். பொதுவாக மனித மலம், அசுத்தமடைந்த நீர், உணவு சுகாதாரம் குறைவாக உள்ள பகுதிகளில் இந்த வகை பரவலாக காணப்படும்.
அமீபா பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?
குடிநீர் மற்றும் சமைக்கும் நீர் பாதுகாப்பானதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பொது நீச்சல் குளங்கள் மற்றும் குளிக்கும் இடங்களில் நீர் சுத்தமாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே குளிக்க வேண்டும். பொது சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். நீர் நிலைகளில் காணப்படும் அமீபாக்கள் அரிதானவே என்றாலும் அவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் தீவிரமானவை. எனவே நீர்நிலைகளில் குளிப்பதற்கு முன்னர் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.