Body Parts : உடலின் இந்த 5 பாகங்களை அடிக்கடி தொடாதீங்க.. மருத்துவர் கூறும் காரணங்கள்
நம் உடலின் ஐந்து பாகங்களை அடிக்கடி கைகளால் தொடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த பாகங்கள் என்ன? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Don't touch these body parts frequently
நம் கைகள் பல இடங்களில் படுகிறது. நாள்தோறும் எண்ணற்றப் பொருட்களை தொடுகிறோம். இதன் காரணமாக நம் கைகளில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள், கிருமிகள், அழுக்குகள் கைகளில் படிந்து இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே உடலில் சில பாகங்களை தேவையில்லாமல் கைகளால் தொடுவதை தவிர்க்க வேண்டும். இது நோய் தொற்றுகள் பரவாமல் தடுக்கவும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கவும் உதவும். இந்த பாக்டீரியாக்கள் நம் உடலுக்குள் நுழைந்து நோய் தொற்றுக்களை உருவாக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் அடிக்கடி தொடுவதை தவிர்க்க வேண்டிய உடல் பாகங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1.முகம்
நம் முகம் மிகவும் உணர்ச்சிகரமானது. கைகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கிருமிகள் முகத்தில் உள்ள துளைகளை அடைத்து பருக்கள், தோல் அலர்ஜி அல்லது தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். முகங்களை அடிக்கடி தொடுவது, கைகளில் இருக்கும் கிருமிகளை கண், மூக்கு, வாய் வழியாக உடலுக்குள் நுழையச் செய்து கண் அலர்ஜி, சளி போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றன. முகம் கழுவும் பொழுது, குளிக்கும் பொழுது, சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தும் போது மட்டுமே முகத்தை தொட வேண்டும். மற்ற நேரங்களில் தேவையில்லாமல் முகத்தை தொடுதல் கூடாது.
2.காது
சிலர் காது அரிக்கிறது என்பதற்காக காதை குடைந்து கொண்டே இருப்பர். ஒரு கட்டத்தில் அந்த பழக்கத்திற்கு அடிமையாக கூட மாறக்கூடும். காதின் கால்வாய் பகுதி மிகவும் மென்மையானது. விரல்களை காதுக்குள் செலுத்துவது, ஊக்கு, ஹேர் பின் போன்ற கூர்மையான பொருட்களை காதுக்குள் விடுவது அல்லது நகங்களால் சொரிவது ஆகியவை காதின் உள் தோலுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக காது தொற்று, காதில் வலி, அரிப்பு ஆகியவை ஏற்படலாம். அரிதான சமயங்களில் கேட்கும் திறனும் பாதிக்கப்படலாம். மாதத்திற்கு ஒருமுறை காட்டன் பட்ஸ்களைக் கொண்டு காதுகளை சுத்தம் செய்யலாம். அதையும் கவனத்துடன் செய்ய வேண்டும்.
3.கண்கள்
கண்கள் உடலின் உணர் திறன் வாய்ந்த மற்றும் எளிதில் பாதிக்க கூடிய ஒரு பகுதியாகும். கண்களை அடிக்கடி கைகளால் தேய்ப்பது அல்லது தொடுவதன் மூலமாக கைகளில் படிந்து இருக்கும் கிருமிகள் எளிதில் கண்களுக்குள் சென்று தொற்று நோய்களை ஏற்படுத்தும். தூசி அல்லது பிற பொருட்கள் கண்களில் விழுந்தால் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். கண்களை கடுமையாக தேய்ப்பது, அழுத்துவது ஆகியவை விழித்திரையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கண்களை அடிக்கடி தண்ணீரில் கழுவுவது, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சொட்டு மருந்துகளை பயன்படுத்துவது நல்லது. அசுத்தமான கைகளால் கண்களை தொடுதல் கூடாது.
4. வாய்
நம் வாயானது பல வகையான பாக்டீரியாக்கள் வாழ்வதற்கு ஏதுவான இடமாகும். ஆனால் இந்த பாக்டீரியாக்கள் பெரும்பாலும் தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் கைகளில் உள்ள பாக்டீரியாக்களை வாய் வழியாக கொண்டு செல்வதன் மூலமாக நோய் தொற்றுகள் உருவாகலாம். குறிப்பாக குடல் சார்ந்த நோய் தொற்றுகள் ஏற்படலாம். சளி, இருமல் போன்ற சமயங்களில் வாயை தொடுவது மற்ற கிருமிகள் பரவ காரணமாக அமையலாம். எனவே கைகளை சுத்தமாக கழுவியப் பின்னரே வாயை தொட வேண்டும். அதேபோல் மூக்கிற்குள் விரல்களை சொருகுவது, மூக்கை சுத்தம் செய்வதற்காக குடைவது போன்ற செயல்களையும் தவிர்க்க வேண்டும்.
5. நகம்
நகம் மற்றும் நகங்களின் உட்பகுதியில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் குவிந்து காணப்படும். இந்தப் பகுதிகளை தேவை இல்லாமல் தொடுவது அல்லது நகம் கடிப்பது ஆகியவை கூடாது. இதன் காரணமாக நகப் பகுதியில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உடலுக்குள் பரவக்கூடும். கை கழுவும் பொழுது நகங்களின் உட்பகுதியை சுத்தமாக கழுவ வேண்டும் மற்றும் நகங்களை ஒழுங்காக வெட்டி பராமரிக்க வேண்டும். குறைந்தது 20 வினாடிகளுக்கு சோப்பு தண்ணீரை பயன்படுத்தி கைகளை நன்கு கழுவ வேண்டும். சோப்பு மற்றும் தண்ணீர் இல்லாத இடங்களில் ஆல்கஹால் கலந்த சானிடைசர்கள் மற்றும் சுத்திகரிப்பான்களை பயன்படுத்தலாம். இந்த எளிய சுகாதார பழக்கங்களை பின்பற்றுவதன் மூலமாக நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
குறிப்பு: மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் பொது சுகாதாரத்தின் அடிப்படையிலானது மட்டுமே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள பாக்டீரியாக்கள் கைகள் மூலமாக எவ்வாறு உடலுக்குள் செல்கின்றது என்பது விளக்கி கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.