- Home
- உடல்நலம்
- Blood Sugar: சுகர் அளவு திடீர்னு ஏறுதா? இனி சாப்பிடுறப்போ 'இந்த' சின்ன ட்ரிக்ஸ் பண்ணுங்க!
Blood Sugar: சுகர் அளவு திடீர்னு ஏறுதா? இனி சாப்பிடுறப்போ 'இந்த' சின்ன ட்ரிக்ஸ் பண்ணுங்க!
Blood Sugar: சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை திடீரென ஏறுவது ஒரு பெரிய ஆபத்து. 'ஃபைபர்-ஃபர்ஸ்ட்' என்னும் ஒரு சின்ன விதியை ஃபாலோ பண்ணாலே இந்த பிரச்சனையை ஈஸியா தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு...
சர்க்கரை நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்காக, அவர்களுக்குக் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளைச் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். பொதுவாக, நாம் எதைச் சாப்பிட்டாலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு சிறிதளவு அதிகரிக்கும். ஆனால், அதுவே திடீரென்று மிகவும் அதிகமாக உயர்ந்தால், உடலிலுள்ள பல உறுப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படும். இத்தகைய 'சுகர் ஸ்பைக்' உடலுறுப்புகளை மட்டும் பாதிக்காமல், ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தின் ஆரோக்கியத்தையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
நாம் உணவை சாப்பிடும் முறை முக்கியம்
ரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வு இருந்தால், அது நம்முடைய வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும். அடிக்கடி ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென உயர்வதே இதற்கு முதன்மைக்காரணமாகும். 'Frontiers in Cardiovascular Medicine' எனும் மருத்துவ இதழ், நாம் உணவை எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே ரத்த சர்க்கரை அளவு மாறுபடுகிறது என்று குறிப்பிடுகிறது.
உணவுப் பழக்கத்தில் பெரிய மாற்றங்களைச் செய்யாமலேயே, இந்தத் திடீர் சுகர் ஸ்பைக்கைக் கட்டுப்படுத்த ஒரு வழி உள்ளது. அதற்கு 'ஃபைபர்-ஃபர்ஸ்ட்' (அதாவது, முதலில் நார்ச்சத்து உணவுகளைச் சாப்பிடுதல்) விதியை பின்பற்றினால் போதுமானது. இம்முறை, நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த உணவுகளை சேருங்கள்
நாம் உணவை உட்கொள்ளும்போது, கணையம் இன்சுலினைச் சுரக்கிறது. இதுவே ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இந்த அளவு மிதமிஞ்சினால், நமது ஆற்றல் அளவு, பசி உணர்வு, நீண்டகால வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் என அனைத்துமே எதிர்மறையாகப் பாதிக்கப்படும். ரத்த சர்க்கரை திடீரென மிக அதிகமாக உயரும்போது, உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உள் அழற்சி கூட அதிகரிக்கக்கூடும்.
'Diabetes, Obesity and Metabolism' இதழில் வெளியான ஓர் ஆய்வின்படி, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவே அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொண்டால், ரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டை மீறி உயர்ந்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.
'Foods' இதழின் தகவல்படி, ரத்த சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்க, கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். எனவே, தினசரி உணவில் வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, லெட்யூஸ், பாலக்கீரை போன்ற உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவுக்கு பின் நடைபயிற்சி முக்கியம்
உணவைச் சாப்பிடும் வரிசையான 'ஃபைபர்-ஃபர்ஸ்ட்' முறையைப் பின்பற்றுவதுடன், உணவுக்குப் பிறகு உடனடியாக 10 முதல் 15 நிமிடங்கள் லேசான நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைக் கணிசமாகக் குறைக்கும். நாம் நடக்கும்போது உடலிலுள்ள தசைநாார்கள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை நேரடியாக ஆற்றலாகப் பயன்படுத்தத் தொடங்குவதால், இன்சுலின் தேவை குறைவதுடன் சர்க்கரை ஸ்பைக்கும் தடுக்கப்படுகிறது.
மேலும், கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடும் முன் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதும் குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கும் வேகத்தை மெதுவாக்கப் பெரிதும் துணைபுரிகிறது.

