நோய்களை நீக்கும் வெறுங்கால் வைத்தியம்.. பலர் அறியாத வாக்கிங் 'டிப்ஸ்'
Sand Walking Benefits : நமது உடலில் ஒரு நோய் கூட வராமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வெறுங்காலில் எவ்வாறு நடைபயிற்சி செல்வது பயனுள்ளதாக இருக்கும் என இங்கு காணலாம்.

நோய்களை நீக்கும் வெறுங்கால் வைத்தியம்.. பலர் அறியாத வாக்கிங் 'டிப்ஸ்'
செல்போன் உரையாடல், பாடல்கள் என எந்த கவனச் சிதறலும் இல்லாமல் நடைபயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். அதிலும் நீங்கள் மண் தரையில் காலணிகள் அல்லது ஷூ எதுவும் அணியாமல் வெறுங்காலில் நடப்பது கூடுதல் நன்மையை தரும். மண்ணுக்கும் உங்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்துவது உடலில் நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கும் என ஜோதிடம் மட்டுமல்ல, உளவியலும் கூட சொல்கிறது. அது ஆரோக்கியமானது. இதனால் உடலுக்கு ஏராளமான நல்லது நடக்கும். நாள்தோறும் ஏன் சில நிமிடங்களாவது வெறும் காலில் நடக்க வேண்டும். அந்த நடைபயிற்சியில் அப்படி என்னதான் நன்மைகள் என இங்கு காணலாம். காலணி அணியாமல் இருப்பதை மக்கள் அநாகரிகமாக கருதுகிறார்கள். வீட்டில் கூட செருப்பு அணிந்து நடப்பவர்கள் பலர் உண்டு. ஆனால் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலணி இல்லாமல் மண்ணில் நடக்க வேண்டும்.
வெறுங்காலில் நடப்பதால் பயன்கள்:
தசை வலுவாகும்!
நீங்கள் செருப்பு அணிந்து நடக்கும் போது உங்களுடைய பாத தசைகள் அதிகமாக இயங்காது. ஆனால் வெறும் கால்களில் மண்ணில் நடந்தால் பாதம் நன்றாக பதியும். இதனால் பாத தசைகளுக்கும் மண்ணுக்கும் இடையே அதிர்வு ஏற்படும். மண்ணில் கால்களின் அழுத்தத்தால் பாதத்தில் இருக்கும் தசைகள் வலுவாகும். கணுக்கால்கள், பாதங்கள் பலப்படுகின்றன. இது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை பலவகையில் மேம்படுத்துகிறது. குறிப்பாக, பாதங்களில் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.
ஆழ்ந்த தூக்கம்!
வெறுங்கால்களில் நடப்பதால் உங்களுடைய தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் நீங்குகின்றன. இதனால் இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும். நாம் நன்றாக தூங்கும்போது உடலில் உள்ள உள்ளுறுப்புகளின் இயக்கம் சீராகிறது. இதனால் சரும பிரச்சனைகள் கூட நீங்கும்.
மூட்டு வலி நிவாரணம்:
நீங்கள் வெறும் கால்களில் தினமும் நடந்தால் உங்களுடைய மூட்டு வலி குறையும். ஆனால் சமதளமான மண்தரையில் நடப்பது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். கரடு முரடான பரப்பினை தேர்ந்தெடுக்க வேண்டாம். இது உங்களுடைய வலியை அதிகப்படுத்தலாம்.
இரத்த அழுத்தம் கட்டுப்பாடு:உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை கட்டுக்குள் கொண்டு வர தினமும் வெறும் கால்களை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட்டு நோய் எதிர்ப்பாற்றல் அதிகமாகும்.
எடை குறைப்பு:
அதிக எடை உள்ளவர்கள் வெறும் காலில் நடக்கும் போது அதிக ஆற்றலை செலவிடுவார்கள். இதனால் அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையை குறைய வாய்ப்புள்ளது. கெட்ட கொழுப்பும் கரையத் தொடங்குகிறது.
அக்குபஞ்சர் புள்ளிகள்!
நீங்கள் செருப்பு அணிந்து நடந்தால் உங்களுடைய அக்குபஞ்சர் புள்ளிகள் மீது எந்தத் தாக்கமும் இருக்காது. ஆனால் வெறுங்காலில் மண்ணில் நடந்தால் அவை தூண்டப்படும். இதனால் உடல் இயக்கம் மேம்படும். கால் தசைகள் உறுதியாகும். மூட்டு, தொடை, இடுப்பு என அனைத்து பகுதிகளுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.
இதையும் படிங்க: புதுசா வாக்கிங் போறீங்களா? அப்ப இந்த '5' விஷயங்கள் முக்கியம்!!
ஏன் மண்ணில் நடக்க வேண்டும்?
தினமும் ஒரே மாதிரியான நடைபயிற்சி மேற்கொண்டால் உடலுக்கு அந்த பயிற்சிகள் பழகிவிடும். இதனால் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. ஆனால் அவ்வப்போது மண்தரையில் வெறுங்காலில் நடப்பது, புல்தரையில் வெறுங்காலில் நடப்பது, அதிக நேரம் நடப்பது, அதிக தூரம் நடப்பது என சற்று மாற்றி நடைபயிற்சிகளை செய்தால் உடலின் இயக்கமும், அதனால் கிடைக்கும் பயன்களும் அபாரமாக இருக்கும்.
இதையும் படிங்க: காலைல தண்ணீர் குடிக்கலாம்.. ஆனா வாக்கிங் போறப்ப தண்ணீர் குடிக்கலாமா?