- Home
- உடல்நலம்
- உணவு
- samba rava kanji:நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க தினமும் காலையில் இந்த கஞ்சியை குடிங்க
samba rava kanji:நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க தினமும் காலையில் இந்த கஞ்சியை குடிங்க
ஒரு நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான ஆற்றலை தரும் வகையிலான உணவை காலையில் எடுத்துக் கொள்வது சிறந்தது. அப்படி ஒரு சூப்பரான கஞ்சியை தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் சுவை, ஆரோக்கியம், ஆற்றல் அனைத்தும் கிடைக்கும்.

சம்பா கோதுமை ரவா கஞ்சியின் சிறப்பு என்ன?
சம்பா கோதுமை ரவா என்பது உடைத்த கோதுமையில் இருந்து தயாரிக்கப்படுவது. வழக்கமான ரவாவை விட இது சற்று பெரியதாகவும், தனித்துவமான மணத்துடனும் இருக்கும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது உங்கள் உடலுக்கு பல வகைகளில் நன்மை செய்கிறது. குறிப்பாக, இது மெதுவாக செரிமானம் ஆகும் தன்மை கொண்டது என்பதால், ரத்த சர்க்கரை அளவை திடீரென உயர்த்தாது.
நாள் முழுவதும் உற்சாகம் மற்றும் சுறுசுறுப்பு:
சம்பா கோதுமையில் உள்ள கார்போஹைடிரேட்டுகள் மெதுவாக செரிமானம் ஆகும். இதனால் உங்கள் உடலுக்கு படிப்படியாக ஆற்றல் கிடைக்கும். காலை உணவாக இதை எடுத்துக்கொள்ளும்போது, நாள் முழுவதும் சோர்வில்லாமல், உற்சாகமாக உங்கள் வேலைகளைச் செய்ய முடியும். திடீரென ஏற்படும் பசி உணர்வும் குறையும்.
உடல் எடையைக் குறைக்க உதவும்:
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சம்பா கோதுமை ரவா கஞ்சி ஒரு சிறந்த நண்பன். இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால், இதைச் சாப்பிட்டதும் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். இதனால் தேவையில்லாத நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது குறையும். மேலும், இது குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால், உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
செரிமான மண்டலத்திற்கு நல்லது:
இதில் உள்ள நார்ச்சத்து உங்கள் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். வயிறு சுத்தமாக இருந்தால், உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்:
சம்பா கோதுமையில் உள்ள மெதுவான செரிமானம் காரணமாக, இது ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்க விடாது. இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ளவர்களுக்கும் ஒரு நல்ல தேர்வு.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்:
சம்பா கோதுமையில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், பி வைட்டமின்களும் உள்ளன. இவை உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் துணை புரிகின்றன.
சம்பா கோதுமை ரவா கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவா - 1/4 கப்
தண்ணீர் - 1.5 கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1/4
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சீரகம் - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிது
சம்பா கோதுமை ரவா கஞ்சி செய்வது எப்படி?
ஒரு கனமான கடாயயை அடுப்பில் வைத்து சூடானாதும், அதில் சம்பா கோதுமை ரவாவை சேர்த்து, மிதமான தீயில் ரவாவின் நிறம் மாறாமல், ஒரு நல்ல வாசனை வரும் வரை சுமார் 2-3 நிமிடங்கள் வறுத்து ஒரு தட்டில் தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதே கடாயில் நெய் சேர்த்து, சீரகம், கறிவேப்பிலை, நசுக்கிய இஞ்சி, மற்றும் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். பின்னர் 1.5 கப் தண்ணீரைசேர்த்து, அடுப்பின் தீயைக் கூட்டவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து, வறுத்த சம்பா கோதுமை ரவாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கொண்டே, ஒரு கரண்டியால் கட்டி படாமல் கிளறவும். ரவாவை சேர்த்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவா நன்கு வெந்து, தண்ணீர் உறிஞ்சப்படும் வரை, சுமார் 5-7 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும். ரவா முழுமையாக வெந்து, கஞ்சி கெட்டியாகும். கஞ்சி அதிகம் கெட்டியாக இருந்தால் மேலும் சிறிது வெந்நீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்.