பொட்டுக்கடலையில் பொதிந்துள்ள நன்மைகள் தெரியுமா? தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டால் போதும்..!
பொட்டுக்கடலையில் இருக்கும் எல்லையில்லா நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பொட்டுக்கடலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. வீட்டில் சட்னிக்கு வாங்கி வைத்திருக்கும் பொட்டுக்கடலையை சமையலறைக்கு செல்லும்போது ஒரு கைப்பிடி எடுத்து உண்ணும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அதில் தவறில்லை நன்மையே என்கிறார்கள் அறிந்தோர். இதில் குறைவான கலோரிகள் காணப்படுவதால் எடை குறைப்பவர்கள் உண்ணவும் ஏற்றது.
நார்ச்சத்தும் புரதச்சத்தும்..
இந்த கடலையில் நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. செரிமானம் ஆக ரொம்ப நேரம் எடுப்பதால் நீண்ட நேரம் முழுமையாக உணர வைக்கும். பசி எடுக்காது. 100 கி வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரதம், 16.8 கி நார்ச்சத்து நிரம்பி காணப்படுகிறது. உடல் எடை குறைக்க பொட்டுக்கடலையை உண்ணலாம். இதிலுள்ள நார்ச்சத்து வயிறு வீங்கிய உணர்வு, மலச்சிக்கல் ஆகியவை ஏற்படாமல் தடுக்க உதவும். குடல் இயக்கத்தை எளிதாக்கும். இதனால் மலம் கடினப்படுவது தடுக்கப்படும்.
இதய நோய்
மாங்கனீஸ், போலேட், பாஸ்பரஸ், காப்பர் ஆகிய இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள் வறுத்த பொட்டுக்கடலையில் காணப்படுகின்றன. இதய நோய் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது. நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்த இதிலுள்ள உதவுகின்றன.
நீரிழிவு நோயாளிகளே கேளுங்கள்!
நீரிழிவு நோயாளிகள் நலன் கருதி நிறைய உணவுகளை உண்ணக் கூடாது என வீட்டில் அறிவுறுத்துவார்கள். ஆனால் பொட்டுக்கடலையை அவர்கள் உண்பது நல்லது. இது குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சரி செய்யும். உங்களுக்கு சர்க்கரை செயலிழப்பில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும்.
இதையும் படிங்க: இட்லி மாவு ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே இருக்கணுமா? வெற்றிலையின் மாயாஜாலத்தை தெரிந்து கொள்ளுங்கள்!
எலும்பு பாதுகாப்பு
ஆரோக்கியமான எலும்புகளுக்கு வறுத்த பொட்டுக்கடலையை உண்ணலாம். இதில் உள்ள தாமிரம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் ஆகிய நோய்களை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இரத்த அழுத்தம்
வறுத்த பொட்டுக்கடலையில் இருக்கும் பாஸ்பரஸ் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். இதனால் தேவையில்லாத இதய பிரச்சனைகள் குறையும். ஆய்வுகளின்படி, நம் உடலின் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பாஸ்பரஸ் அதிகமாக எடுத்து கொள்வது அவசியமானது என தெரியவந்துள்ளது.
வறுத்த பொட்டுக்கடலையில் காணப்படும் செலினியம் ஆற்றல் வாய்ந்த ஆக்ஸினேற்றி. இது டி.என்.ஏ சேதத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல நோய்களோடு போராடும் எதிர்பாற்றலோடு இருக்கும் பொட்டுக்கடலையை தினமும் அளவோடு உண்டு பயன்பெறுங்கள்.
இதையும் படிங்க: காவி நிறத்தில் பூணூலோடு 'பிராமின்ஸ் குக்கீஸ்' பிஸ்கெட்டில் சாதியை தூக்கி பிடிக்கணுமா? கொதிக்கும் நெட்டிசன்கள்