- Home
- உடல்நலம்
- உணவு
- Kids favourite moringa mandi: முருங்கை கீரை பிடிக்கலையா? அப்போ பிள்ளைகளுக்கு இந்த மண்டி செஞ்சு கொடுங்க!
Kids favourite moringa mandi: முருங்கை கீரை பிடிக்கலையா? அப்போ பிள்ளைகளுக்கு இந்த மண்டி செஞ்சு கொடுங்க!
Kids favourite moringa mandi: அரிசி கழுவிய நீரில் முருங்கை கீரையை வேகவைத்து, தாளிப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்யப்படும் குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உணவுதான் இந்த முருங்கை கீரை மண்டி.

முருங்கைக் கீரை மண்டி
சாதாரணமாக முருங்கை கீரையைப் பொரியலாகவோ அல்லது கூட்டு வைத்தோ கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடத் தயங்குவார்கள். ஆனால், பாரம்பரிய முறையிலான அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்யப்படும் இந்த முருங்கை கீரை மண்டி மிகவும் சுவையாக இருப்பதால், குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். அரிசி கழுவும் நீரையே பாரம்பரியமாக 'மண்டி' என்று அழைக்கிறார்கள். குறைந்த நேரத்தில் சத்தான இந்த ரெசிபியை எளிதாகத் தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை
அரிசி கழுவிய தண்ணீர்
தக்காளி
பூண்டு
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
தேங்காய்
சின்ன வெங்காயம்
கடுகு & வெந்தயம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயத்தூள்
எண்ணெய் & உப்பு
படி 1
முதலில் அரிசி கழுவி வைத்திருக்கும் தண்ணீரை ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும். அரிசி கழுவிய நீர் இல்லையென்றால் அரிசி வடித்த தண்ணீரையும் பயன்படுத்தலாம். அதனுடன் சுத்தம் செய்த முருங்கை கீரை, தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரஷர் குக் செய்து வேகவைக்கவும். வெந்த கீரையை நன்கு கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
படி 2
அடுத்து ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு பொரிய விடவும். இத்துடன் காய்ந்த மிளகாய் மற்றும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இந்தத் தாளிப்பை ஏற்கனவே கடைந்து வைத்துள்ள முருங்கை கீரை கலவையுடன் சேர்க்கவும்.
படி 3
துருவிய தேங்காயை நன்கு அரைத்து, முதலில் எடுக்கும் கெட்டியான பாலையும், இரண்டாவதாக எடுக்கும் தண்ணீர் பாலையும் தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் முருங்கை கீரை கலவையில் இரண்டாவது தேங்காய்ப்பாலைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். உப்பு சரியாக உள்ளதா எனச் சரிபார்த்துக் கொள்ளவும். இறுதியாக அடுப்பை அணைத்துவிட்டு, முதலில் எடுத்து வைத்த கெட்டியான தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். அடுப்பு எரியும்போது சேர்த்தால் பால் திரிந்துவிடும். இத்துடன் சிறிதளவு பெருங்காயத்தூள் தூவி லேசாகக் கலந்து இறக்கினால் சுவையான முருங்கை இலை மண்டி தயார்.













