- Home
- உடல்நலம்
- உணவு
- crispy snacks for kids: மழைக்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்; குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் சீஸ் பால்!
crispy snacks for kids: மழைக்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்; குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் சீஸ் பால்!
crispy snacks for kids: மழைக்கால மாலை நேரங்களில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் வகையில், சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு கொண்டு எளிதாகச் செய்யக்கூடிய மொறுமொறுப்பான பீட்ரூட் சீஸ் பால் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பீட்ரூட் சீஸ் பால்
மழைக்காலம் தொடங்கிவிட்டாலே, மாலை நேரத்தில் குழந்தைகள் ஏதாவது சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடிப்பார்கள். வழக்கமாக சீஸ் பால் செய்ய உருளைக்கிழங்கை மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், இந்த முறை சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டைச் சேர்த்து, பார்ப்பதற்கே மிகவும் வண்ணமயமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் 'பீட்ரூட் சீஸ் பால்' எப்படிச் செய்வது என்று பார்க்கலாம். வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் உருகிய சீஸுடனும் இருக்கும் இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1
உருளைக்கிழங்கு – 1 பெரியது
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 முதல் 5 பற்கள்
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
கொத்தமல்லி இலைகள்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
மல்லித் தூள் (தனியா தூள்) – ½ டீஸ்பூன்
சீரகத் தூள் – ½ டீஸ்பூன்
மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்
அரிசி மாவு – 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
மொஸரெல்லா சீஸ் அல்லது சாதாரண சீஸ் கியூப்ஸ்
கோதுமை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
பிரெட் கிரம்ஸ்
எண்ணெய்
படி 1
முதலில் தோல் சீவிய பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் போட்டு, சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வெந்த காய்கறிகளில் உள்ள ஈரப்பதத்தை நன்கு வடித்துவிட்டு, ஒரு துருவியின் உதவியால் பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கை நைஸாகத் துருவிக்கொள்ளவும்.
படி 2
ஒரு சாப்பரில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துப் பொடியாக நறுக்கி, துருவிய காய்கறிகளுடன் சேர்க்கவும். இதனுடன் கரம் மசாலா, மல்லித் தூள், சீரகத் தூள், மிளகாய் தூள், அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கைகளால் நன்கு பிசைந்து மாவு பதத்திற்குக் கொண்டு வரவும். மாவில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், சிறிது அரிசி மாவு அல்லது கடலை மாவு சேர்த்துக்கொண்டால் எண்ணெயில் போடும்போது உடையாமல் வரும்.
படி 3
பிசைந்த மாவிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து உள்ளங்கையில் தட்டி, நடுவில் சிறிய துண்டு மொஸரெல்லா சீஸ் வைத்து, சீஸ் வெளியே தெரியாதவாறு உருண்டையாக உருட்டிக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். தயார் செய்த பீட்ரூட் உருண்டைகளை முதலில் கோதுமை மாவு கரைசலில் நனைத்து எடுத்து, பின்னர் பிரெட் கிரம்ஸில் நன்கு புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், மிதமான தீயில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுத்தால் சுவையான பீட்ரூட் சீஸ் பால் தயார். இதனைப் புதினா சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சூடாகப் பரிமாறவும்.













