- Home
- உடல்நலம்
- உணவு
- Winter special snacks: மழைக்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்; எண்ணெயில் வறுக்காத ராகி வடை!
Winter special snacks: மழைக்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்; எண்ணெயில் வறுக்காத ராகி வடை!
Winter special snacks: எண்ணெயில் வறுத்தால் சிலருக்கு சேராது மற்றும் ஹெல்தியாகவும் இல்லாமல் அதிகம் எண்ணெயாக இருக்கும் அதற்கு பதிலாக ராகி வடை இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க.

ராகி வடை
மழைக்காலம் மற்றும் குளிர்கால மாலை நேரங்களில் சூடான தேநீருடன் சேர்த்து ஏதாவது மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆனால், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. குறிப்பாகக் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஆரோக்கியமான, அதே சமயம் சுவையான மாலை நேர சிற்றுண்டியைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ராகி (கேழ்வரகு) மாவு மற்றும் உருளைக்கிழங்கை வைத்து, ஒரு சொட்டு எண்ணெயில் கூட பொரிக்காமல் ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் இந்த ஆரோக்கியமான ராகி வடை செய்வதற்கு மிகவும் எளிதானது.
தேவையான பொருட்கள்
ராகி மாவு (கேழ்வரகு மாவு) – 1 கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 1
தண்ணீர்
சில்லி ஃப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை
உப்பு
வாழை இலை
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
படி 1
முதலில் ஒரு வாணலியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். தண்ணீர் சூடானதும் அதில் தேவையான அளவு உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து ராகி மாவை அதில் கொட்டி கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு மாவை சற்று ஆற விடவும். கை பொறுக்கும் சூடு வந்ததும், மாவை மென்மையாக நன்கு பிசைந்து கொள்ளவும்.
படி 2
பிசைந்து வைத்துள்ள ராகி மாவுடன், ஏற்கனவே வேகவைத்து நன்கு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசையவும். தயார் செய்த மாவிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். இட்லி தட்டு அல்லது ஸ்டீமரில் ஒரு வாழை இலையை விரித்து, அதன் மேல் உருட்டி வைத்துள்ள ராகி உருண்டை வடைகளை அடுக்கி ஆவியில் வேகவைக்கவும்.
படி 3
வெந்ததும் வெளியே எடுக்கும்போது உருண்டைகள் சற்று மென்மையாகவும் கொழகொழப்பாகவும் இருப்பது போல் தோன்றும்; ஆனால் சற்று ஆறியதும் அவை நன்கு கெட்டியாகி சரியான பதத்திற்கு வந்துவிடும். இறுதியாக ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் எள் சேர்த்துப் பொன்னிறமாகத் தாளிக்கவும். இந்தத் தாளிப்பை வேகவைத்த ராகி உருண்டைகளின் மேல் கொட்டி நன்கு கிளறினால், சுவையான மற்றும் ஆரோக்கியமான 'நோ-ஃப்ரை' ராகி ஸ்நாக்ஸ் தயார். இதனைச் சூடான சட்னி அல்லது சாஸுடன் சேர்த்து மழைக்கால மாலை நேரத்தில் பரிமாறலாம்.















