Kitchen Tips : எண்ணெய் குடிக்காமல் மொறுமொறு பூரி சுட 7 சிம்பிள் டிப்ஸ்
Kitchen Tips : பூரி சில நேரங்களில் அது அதிக எண்ணெய் குடித்துவிடும். கெட்டியான மாவு பிசைவது, ரவை சேர்ப்பது, சரியான சூட்டில் எண்ணெயை வைப்பது போன்ற சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால், பூரி அதிக எண்ணெய் குடிப்பதை தவிர்க்கலாம்.

சமையல் குறிப்புகள்
பூரி என்பது இந்தியாவில் பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள் மற்றும் விருந்தினர்கள் வரும்போது செய்யக்கூடிய ஒரு பிரபலமான உணவு. சென்னா மசாலா அல்லது உருளைக்கிழங்கு மசாலாவுடன் மொறுமொறுப்பான பூரியை சேர்த்து சாப்பிடுவது அருமையாக இருக்கும். ஆனால், சில நேரங்களில் பூரி அதிக எண்ணெய் குடிப்பதால், பலரும் இதை விரும்புவதில்லை. அதிக எண்ணெய் குடித்த பூரி பார்க்க நன்றாக இருக்காது, சாப்பிட்டாலும் நெஞ்சை கரிப்பது போல் இருக்கும். பூரி அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்க சில எளிய சமையல் குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1) கெட்டியாக மாவு பிசையவும்
பூரி சுட, மாவை கெட்டியாக பிசைய வேண்டும். சப்பாத்தி மாவு போல் பூரி மாவு ரொம்ப சாஃப்ட்டாக இருக்கக் கூடாது. மாவு பிசையும்போது, குறைவான தண்ணீர் ஊற்றி, மாவு கெட்டியாகவும் மிருதுவாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
2) மாவுடன் ரவை அல்லது கடலை மாவு சேர்க்கலாம்
மாவு பிசையும் போது, சிறிதளவு ரவை அல்லது கடலை மாவு சேர்த்து பிசையவும். சிலர் சிறிதளவு மைதாவையும் சேர்ப்பார்கள். ஒரு கப் கோதுமை மாவுக்கு சுமார் 2 டேபிள் ஸ்பூன் ரவை அல்லது கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம். இது பூரி அதிக எண்ணெய் குடிப்பதை தடுப்பதுடன், அதன் வடிவத்தையும் சரியாக வைத்திருக்கும்.
3) உலர்ந்த மாவு தூவ வேண்டாம்
பூரி திரட்டும்போது, அதன் மீது உலர்ந்த மாவை தூவி திரட்ட வேண்டாம். அந்த மாவு சூடான எண்ணெயில் கருகி, எண்ணெயை பாழாக்குவதுடன், பூரி அதிக எண்ணெய் குடிக்கவும் வழிவகுக்கும். அதற்கு பதிலாக, மாவை திரட்டுவதற்கு முன், மாவு உருண்டைகளில் சிறிதளவு எண்ணெய் அல்லது நெய் தடவி மெதுவாக திரட்டவும்.
4) பழைய மாவை பயன்படுத்த வேண்டாம்
ஃப்ரிட்ஜில் வைத்த மாவில் பூரி செய்ய வேண்டாம். பழைய மாவில் செய்யும் பூரி சரியாக உப்பி வராது, மேலும் அதிக எண்ணெயை குடித்துவிடும். நல்ல முறையில் பூரி சுட எப்போதும் புதிதாக பிசைந்த மாவை பயன்படுத்தவும்.
5) சரியான எண்ணெய் சூடு
எண்ணெயை சரியான சூட்டில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். எண்ணெய் அதிக சூடாக இருந்தால் பூரி சீக்கிரம் கருகிவிடும். சூடு குறைவாக இருந்தால் அதிக எண்ணெயை குடிக்கும். எனவே, பூரியை பொரிப்பதற்கு முன், எண்ணெயை நன்றாக சூடாக்கி, மிதமான மற்றும் அதிக சூட்டுக்கு இடையில் வைத்து பூரியை சுடவும்.
6) பூரியை அடிக்கடி திருப்பி போட வேண்டாம்
சூடான எண்ணெயில் பூரியை போட்டதும், அது உப்பி வர ஒரு கரண்டியால் மெதுவாக பூரியை அழுத்தவும். ஒரு பக்கம் வெந்ததும் மட்டுமே அதை திருப்பி போட வேண்டும். பூரியை அடிக்கடி திருப்பி போட்டால் அது அதிக எண்ணெயை குடிக்க நேரிடும்.
7) டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவல் பயன்படுத்தவும்
பூரி வெந்ததும், அதை டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவல் மீது வைக்கவும். இது பூரியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சிக்கொள்ள உதவும், பூரியும் அதிக எண்ணெய் இல்லாமல் இருக்கும். இந்த எளிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், குறைந்த எண்ணெயில், நன்றாக உப்பிய, மொறுமொறுப்பான பூரிகளை செய்யலாம். அடுத்த முறை வீட்டில் பூரி செய்யும்போது இந்த குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள்.













