- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Hair oil applying tips: தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? இனி இந்தத் தவறுகளைச் செய்யாதீங்க!
Hair oil applying tips: தினமும் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? இனி இந்தத் தவறுகளைச் செய்யாதீங்க!
Hair oil applying tips: எண்ணெய் வைத்தாலே முடி வளரும் என்று சிலர் நினைத்து தினமும் எண்ணெய் வைப்பார்கள். அப்படி இருக்கையில் ஒரு வாரத்திற்கு எத்தனை முறை தலையில் எண்ணெய் வைக்கலாம் என்று தெரிஞ்சுக்கோங்க.

வாரத்திற்கு எத்தனை முறை எண்ணெய் வைக்கலாம்
ஆரோக்கியமான, அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தல் என்பது அனைவரின் விருப்பமாகும். நம் முன்னோர்கள் காலம்காலமாகப் பின்பற்றி வரும் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று தலைக்கு எண்ணெய் தேய்ப்பது. ஆனால், இன்றைய நவீன காலக்கட்டத்தில், "வாரத்திற்கு எத்தனை முறை எண்ணெய் வைக்க வேண்டும்?", "தினமும் எண்ணெய் வைப்பது நல்லதா?" போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுகின்றன. அதற்கு பதில் சொல்லும் விதமாக உங்களுடைய முடி நன்றாக வளர, எண்ணெய் வைத்து பராமரிக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.
வாரத்திற்கு எத்தனை முறை எண்ணெய் வைக்க வேண்டும்?
பொதுவாக, வாரத்திற்கு 2 முதல் 3 முறை தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே மிகச் சிறந்தது என சரும மற்றும் கூந்தல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இது ஒவ்வொருவரின் உச்சந்தலையின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.
வறண்ட கூந்தல் மற்றும் உச்சந்தலை உடையவர்கள் வாரத்திற்கு 2 முதல் 3 முறை எண்ணெய் தடவலாம். இது கூந்தலுக்குத் தேவையான ஈரப்பதத்தைத் தந்து, முடி உடைவதைத் தடுக்கும்.
எண்ணெய் பசை கொண்ட உச்சந்தலை உடையவர்களுக்கு தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரப்பு அதிகமாக இருக்கும். எனவே, வாரத்திற்கு ஒரு முறை மட்டும் எண்ணெய் வைத்தால் போதுமானது. அதிகப்படியான எண்ணெய் துளைகளை அடைத்து, பொடுகு மற்றும் முடி உதிர்வை ஏற்படுத்தக்கூடும்.
சாதாரண கூந்தல் உடையவர்கள் வாரத்திற்கு 2 முறை எண்ணெய் தடவி குளிப்பது கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தினமும் எண்ணெய் வைக்கலாமா?
பலர் தினமும் தலைக்கு எண்ணெய் வைத்துக் கொண்டு வெளியே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இது தவறான பழக்கமாகும். தலையில் எண்ணெய் இருக்கும்போது, காற்றில் உள்ள தூசி, அழுக்கு மற்றும் மாசுக்கள் எளிதில் உச்சந்தலையில் ஒட்டிக்கொள்ளும். இது மயிர்க்கால்களை அடைத்து, பாக்டீரியா தொற்று, அரிப்பு, பொடுகு மற்றும் கடுமையான முடி உதிர்வு ஏற்படும். மேலும், தினமும் எண்ணெய் வைப்பதால் அதைச் சுத்தம் செய்ய தினமும் ஷாம்பு பயன்படுத்த வேண்டியிருக்கும்; இது கூந்தலின் இயற்கையான ஈரப்பதத்தை முற்றிலுமாகப் போக்கிவிடும்.
எண்ணெய் தேய்க்கும் சரியான முறை
எண்ணெய் வைப்பதால் முழுப் பலன் கிடைக்க, அதைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்:
இளம் சூடான எண்ணெய்: தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை லேசாகச் சூடுபடுத்தி மிதமான சூட்டில் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
மென்மையான மசாஜ்: விரல் நுனிகளால் உச்சந்தலையில் 5 முதல் 10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். நகங்களால் சொறிவதையோ அல்லது அழுத்தித் தேய்ப்பதையோ தவிர்க்கவும்.
ஊறவைக்கும் நேரம்: எண்ணெய் தேய்த்த பிறகு, குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை ஊறவிட்டு, பின்னர் மிதமான ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு தலைக்குக் குளிக்க வேண்டும். இரவு முழுவதும் எண்ணெய் வைத்துத் தூங்குவதை விட, குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எண்ணெய் வைப்பதே பாதுகாப்பானது.
சரியான இடைவெளியில், அளவான எண்ணெய் பயன்படுத்தி கூந்தலைப் பராமரித்தால், முடி உதிர்வு நீங்கி கூந்தல் இயற்கையான பொலிவுடன் ஆரோக்கியமாக வளரும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.













