- Home
- உடல்நலம்
- உணவு
- பார்த்தாலே எச்சில் ஊறும்... 10 நிமிடத்தில் நாவில் கரையும் செட்டிநாடு சிக்கன் வறுவல்; ஈசி ரெசிபி!
பார்த்தாலே எச்சில் ஊறும்... 10 நிமிடத்தில் நாவில் கரையும் செட்டிநாடு சிக்கன் வறுவல்; ஈசி ரெசிபி!
பாக்கெட் மசாலா இல்லாம, அஞ்சறைப் பெட்டி மசாலாவுல வெறும் 10 நிமிஷத்துல கிராமத்து சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். இது சுடச்சுட சாதம், மிளகு ரசம், சாம்பார் சாதம் மற்றும் சப்பாத்தி, பரோட்டா போன்ற உணவுகளுக்கு மிகச் சிறந்த சைடிஷ்!

நாவில் கரையும் சுவையான சிக்கன் வறுவல் - அசத்தல் ரெசிபி!
திடீரென காரசாரமான சிக்கன் வறுவல் சாப்பிட நினைப்பவர்களுக்காக, அதிக நேரம் சமையலறையில் செலவிடாமல் வெறும் 10 நிமிடங்களில் தயார் செய்யக்கூடிய எளிய சிக்கன் வறுவல் செய்முறை. கடைகளில் விற்கப்படும் பாக்கெட் மசாலாக்களைத் தவிர்த்து, வீட்டிலுள்ள எளிய அஞ்சறைப் பெட்டிப் பொருட்களை அப்போதே புதிதாக வறுத்து அரைத்துப் பயன்படுத்துவது இதன் தனித்துவமான சுவைக்குக் காரணமாக அமைகிறது.
தேவையான பொருட்கள் சிக்கன்
கடலை எண்ணெய்
சோம்பு
சீரகம்
மிளகு
மல்லி (தனியா)
காஷ்மீரி காய்ந்த மிளகாய்
பூண்டு (நறுக்கியது அல்லது தட்டியது)
கறிவேப்பிலை
உப்பு (சுவைக்கேற்ப)
எலுமிச்சம்பழம்
செய்முறை விளக்கம்
மசாலா பொடி தயாரித்தல்: முதலில் ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து சோம்பு, சீரகம், மிளகு, மல்லி மற்றும் காஷ்மீரி காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நறுமணம் வரும் வரை பொன்னிறமாக வறுக்க வேண்டும். பின்னர் அதனை நன்றாக ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசான பொடியாக அரைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கன் வதக்குதல்: தொடர்ந்து, அதே கடாயில் தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றிச் சூடானதும், நறுக்கிய அல்லது லேசாகத் தட்டிய பூண்டு மற்றும் கொத்துக் கறிவேப்பிலை சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வதக்க வேண்டும். பூண்டு பொரிந்ததும் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளையும், 1 டீஸ்பூன் உப்பையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து கிளற வேண்டும்.
செய்முறை விளக்கம் - 2
மசாலா சேர்த்தல் & வேகவைத்தல்: சிக்கன் வேகத் தொடங்கும் போது அதிலிருந்து இயற்கையாகவே தண்ணீர் பிரிந்து வரும். அந்த நேரத்தில், புதிதாக அரைத்து வைத்துள்ள பிரஷ் மசாலா பொடியில் இருந்து 1 டேபிள் ஸ்பூன் அளவு தூவி நன்கு கிளற வேண்டும். பின்னர் கடாயை மூடி போட்டு மிதமான தீயில் வேகவைத்தால், சிக்கன் மிருதுவாக வெந்து எண்ணெயோடு மசாலா சுருளச் சுருள வறுபட்டு வரும்.
இறுதிப் பதம்: சிக்கன் துண்டுகள் அனைத்தும் மசாலா இறங்கி மொறுமொறுப்பான வறுவல் பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு அரை எலுமிச்சம்பழத்தின் சாற்றைப் பிழிந்து நன்றாகக் கலந்து இறக்கினால் சுவையான சிக்கன் வறுவல் தயார்.
சிறப்பம்சங்கள்
காஷ்மீரி மிளகாய் சேர்க்கப்படுவதால் இந்த வறுவல் கண்ணைக் கவரும் அடர் சிவப்பு நிறத்துடனும், நாவிற்கு இதமான மிதமான காரத்துடனும் அமைகிறது. மேலும், இடிச்சுப் போட்ட பூண்டு மற்றும் கறிவேப்பிலையின் கிராமத்து மணம் இதற்கு கூடுதல் சுவையூட்டுகிறது.இந்த சிக்கன் வறுவல் சுடச்சுட சாதம், மிளகு ரசம் சாதம், சாம்பார் சாதம் மட்டுமல்லாமல் சப்பாத்தி, பரோட்டா போன்ற டிபன் வகைகளுக்கும் சிறந்த சைடிஷ் உணவாகப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

