- Home
- உடல்நலம்
- உணவு
- ரசம் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்... மசாலா உதிராமல் நாவில் கரையும் மொறுமொறு இறால் தவா ஃப்ரை; சட்டுபுட்டுனு செய்வது எப்படி?
ரசம் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்... மசாலா உதிராமல் நாவில் கரையும் மொறுமொறு இறால் தவா ஃப்ரை; சட்டுபுட்டுனு செய்வது எப்படி?
கடற்கரை ஓர உணவகங்கள் மற்றும் பீச் சைட் கடைகளில் கிடைக்கும் காரசாரமான நறுமணமும் சுவையும் கொண்ட ‘இறால் தவா வறுவல்’ வீட்டிலேயே மிக எளிய முறையில் செய்யும் செய்முறை விளக்கம்.

மிரட்டலான பீச் சைட் சுவையில் 'இறால் தவா வறுவல்'
கடல் உணவு பிரியர்களுக்கு எப்போதுமே இறால் என்றாலே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக அந்தி சாயும் மாலை வேளையில், கடற்கரை ஓரக் கடைகளிலும் பீச் சைட் ஹோட்டல்களிலும் சுடச்சுட தவாக்களில் வறுத்துத் தரும் காரசாரமான 'தவா இறால் வறுவலின்' வாசனையே ஆளைத் தூக்கும்.
அதே அச்சு அசல் நாவூறும் பீச் கடை சுவையில், அதிக மெனக்கெடலே இல்லாமல் மிகக் குறைந்த நேரத்தில் வீட்டிலேயே அட்டகாசமான ‘இறால் தவா வறுவல்’ எப்படிச் செய்வது என்று பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள் என்னென்ன?
இறால் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
குழம்புத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – காரத்திற்குத் தகுந்தவாறு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – தேவையான அளவு
எலுமிச்சம் பழம் – 1 (சாறு பிழிந்தது)
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
(இறாலைக் கழுவிச் சுத்தம் செய்ய: சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு)
செய்முறை விளக்கம் - சுத்தப்படுத்தும் முறை
முதலில் இறாலின் மேல் தோலை உரித்துவிட்டு, நடுவில் இருக்கும் கருப்பு நரம்பு போன்ற குடல் பகுதியை முழுமையாக நீக்கிவிட வேண்டும். பின்னர், அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, தண்ணீரில் 2 முதல் 3 முறை சுத்தமாகக் கழுவி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மசாலா மேரினேஷன் & தவாவில் வறுக்கும் வித்தை
சுத்தம் செய்து வைத்துள்ள இறாலுடன் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் குழம்புத் தூள், உங்கள் காரத்திற்குத் தேவையான மிளகாய்த் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, தேவையான அளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது மசாலாக்கள் அனைத்தும் இறாலின் ஒவ்வொரு துண்டிலும் நன்கு படியும் வகையில் கைகளால் நன்றாகப் பிரட்டி விடுங்கள். இந்த மசாலா இறாலில் நன்றாக ஊறி சுவை அள்ளுவதற்காக, இதனை அப்படியே குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு, அடுப்பில் தோசைக்கல்லை (தவா) வைத்துச் சூடானதும் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், மசாலாவில் ஊறிய இறால்களை ஒவ்வொன்றாகத் தவாவில் பரப்பி வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, 3 நிமிடத்திற்கு ஒரு முறை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.
மணமணக்கும் ஃபினிஷிங்
இறால் நன்கு வெந்து, மசாலா சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும் வேளையில், இறுதியாகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையை மேலே தூவி ஒரு பிரட்டு பிரட்டி இறக்கினால் போதும்!
அச்சு அசல் கடற்கரை ஓர உணவகங்களில் கிடைக்கும் அதே மணமும் மொறுமொறுப்பும் கொண்ட 'இறால் தவா வறுவல்' கமகமவெனத் தயார்! இதனை சுடச்சுட சாதம், ரசம் சாதத்திற்கு சைடிஷ்ஷாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாக அப்படியே சாப்பிடவோ கொடுத்தால் தட்டே காலியாகிவிடும்!

