- Home
- உடல்நலம்
- உணவு
- Banana Dosa : நெய் மணக்கும் வாழைப்பழம் தோசை.. கனிந்த வாழைப்பழத்தில் ருசியான ஸ்நாக்ஸ் செய்து பாருங்க!
Banana Dosa : நெய் மணக்கும் வாழைப்பழம் தோசை.. கனிந்த வாழைப்பழத்தில் ருசியான ஸ்நாக்ஸ் செய்து பாருங்க!
Banana Dosa : வீட்டில் கனிந்த வாழைப்பழம் இருக்கிறதா? அதை வைத்து சுவையான வாழைப்பழம் தோசை தயாரிக்கலாம். வாழைப்பழம், வெல்லம், தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நெய்யில் சுட்டெடுக்கும் இந்த இனிப்பு தோசையின் செய்முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

வாழைப்பழம் தோசை
வீட்டில் வாழைப்பழம் வாங்கி வைத்திருப்போம். சில நேரங்களில் அவை நன்றாகக் கனிந்து சாப்பிட முடியாத அளவுக்கு மென்மையாகிவிடும். இனி அப்படிக் கனிந்த வாழைப்பழங்களை வீணாக்க வேண்டாம். அவற்றை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சுவையான வாழைப்பழம் தோசையைச் செய்து அசத்தலாம்.
வழக்கமான தோசையைப் போல மாவு அரைத்து, புளிக்க வைத்து சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. கனிந்த வாழைப்பழத்துடன் வெல்லம், ஏலக்காய்த்தூள், அரிசி மாவு உள்ளிட்ட சில பொருள்களைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, நெய்யில் பொன்னிறமாகச் சுட்டெடுத்தால் போதும். வீட்டையே மணக்கச் செய்யும் இனிப்பான வாழைப்பழம் தோசை தயார்.
குறிப்பாக மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சாப்பிடுவதற்கும், குழந்தைகளுக்குச் சிற்றுண்டியாகக் கொடுப்பதற்கும் இந்த வாழைப்பழம் தோசை சிறந்த தேர்வாக இருக்கும். சரி, இந்த சுவையான தோசையை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
வாழைப்பழம் தோசை செய்யத் தேவையான பொருள்கள்
- நன்கு கனிந்த வாழைப்பழம் - 2
- மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்
- அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
- வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - 1\2 - 1 கப்
- ஏலக்காய்த்தூள் - 1\2 டீஸ்பூன்
- நெய் - தேவையான அளவு
- உப்பு - ஒரு சிட்டிகை
- ஆப்ப சோடா - ஒரு சிறிய சிட்டிகை
- முந்திரி - விருப்பத்திற்கு ஏற்ப
வாழைப்பழம் தோசை செய்முறை - படி 1
வாழைப்பழத்தை மசிக்கவும்
முதலில் நன்கு கனிந்த இரண்டு வாழைப்பழங்களையும் தோல் உரித்து ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். பின்னர் கரண்டி அல்லது கையால கட்டிகள் இல்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
படி 2
மாவு தயாரிக்கவும்
மசித்த வாழைப்பழத்துடன் மைதா மாவு, அரிசி மாவு மற்றும் ஒரு சிறிய சிட்டிகை ஆப்ப சோடா, இரண்டாக உடைத்த முந்திரி பருப்பு சேர்க்கவும். அனைத்துப் பொருள்களும் ஒன்றோடு ஒன்று நன்றாகக் கலக்கும்படி பிசையவும்.
படி 3
இனிப்புப் பொருள்களைச் சேர்க்கவும்
இதனுடன் வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்த மாவு மிகவும் தண்ணீராக இல்லாமல், தோசை ஊற்றுவதற்குப் பதிலாக கரண்டியால் எடுத்துக் கடாயில் பரப்பக்கூடிய அளவுக்குக் கெட்டியாக இருக்க வேண்டும்.
படி 4
தோசையாகச் சுட்டெடுக்கவும்
அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும். தயார் செய்து வைத்துள்ள வாழைப்பழ மாவை ஒரு கரண்டி அளவு எடுத்து நெய்யில் ஊற்றவும். கரண்டியால் மெதுவாகச் சிறிய, சற்று தடிமனான தோசை வடிவில் பரப்பவும்.
படி 5
பொன்னிறமாக வேகவைக்கவும்
தோசையின் அடிப்பகுதி வெந்ததும் மெதுவாகத் திருப்பிப் போடவும். தோசை பொன்னிறமாகவும், உள்ளே நன்றாக வேகும் வரையும் சுட்டெடுக்கவும். இதேபோல் மீதமுள்ள மாவையும் தோசைகளாகச் சுட்டெடுக்கவும். அவ்ளோதான் சுவையான வாழைப்பழம் தோசை தயார்.
வாழைப்பழம் தோசை சுவையாக வர சில குறிப்புகள்
- நன்கு கனிந்த வாழைப்பழங்களைப் பயன்படுத்தினால் இயற்கையான இனிப்பும் நல்ல மணமும் கிடைக்கும்.
- வெல்லத்தைச் சேர்ப்பதற்கு முன்பு தூளாக்கிச் சேர்த்தால் மாவில் எளிதாகக் கலந்துவிடும்.
- மாவு மிகவும் தளர்வாக இருந்தால் சிறிதளவு அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
- ஆப்ப சோடாவை மிகக் குறைந்த அளவே சேர்க்க வேண்டும். அதிகமாகச் சேர்த்தால் சுவை மாறிவிடும்.
- இந்தத் தோசையை அதிக தீயில் சுடக்கூடாது. வெல்லம் மற்றும் வாழைப்பழம் இருப்பதால் விரைவில் கருகிவிடும். எனவே மிதமான தீயில் சுடுவது நல்லது.
நெய்யில் சுட்டால் நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.
எதனுடன் பரிமாறலாம்?
சூடான வாழைப்பழம் தோசை குழந்தைகளுக்குப் பிடித்தமான மாலை நேரச் சிற்றுண்டியாகவும், காலை உணவின் இனிப்புப் பகுதியாகவும் பரிமாறலாம்.
ஒரு சிறிய குறிப்பு: இந்தத் தோசை வாழைப்பழம் மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்வதால் உள்ளே மென்மையாகவும், வெளியே லேசாக மொறுமொறுப்பாகவும் இருக்கும். ஒருமுறை செய்து சுவைத்துப் பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் செய்து தரச் சொல்லும் அளவுக்கு இதன் சுவை நிச்சயம் பிடிக்கும்.
பிரபல செஃப் வெங்கட்பட் கலந்துகொள்ளும் சமையல் நிகழ்ச்சியில் அவர் பகிர்ந்துகொண்ட செய்முறைப்படி இந்தத் தோசை தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.











