Suriya: கோர முகம் காட்டி மக்களை வஞ்சித்த மிக்ஜாம்! முதல் ஆளாக ஓடி வந்து நிதியுதவி கொடுத்த சூர்யா - கார்த்தி!
மிக்ஜாம் புயலால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் ஆளாக ஓடி வந்து மக்களுக்கு நிதி உதவி செய்துள்ளனர் சூர்யா மற்றும் கார்த்தி.
சென்னையில் கோர முகம் காட்டி வரும் மிக்ஜாம் புயலால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் ஏராளமான மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
புயலால் பல இடங்களில் வேரோடு கவிழ்ந்த மரங்கள் உடனடியாக அப்பூரப்படுத்த பட்டாலும், இயற்கையின் சீற்றத்தை ஓரளவே மனிதர்களால் கட்டுப்படுத்த முடியும் எனபதை மிக்ஜாம் உணரவைத்துள்ளது. மழைநீர் தேங்காத வண்ணம், அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும்.... நேற்று இரவில் இருந்து கொட்டி தீர்க்கும் மழையால், சென்னை நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. பெரும்பாலான இடங்களில்... முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதே போல் கீழ் தளத்தில் வசித்து வரும் பெரும்பாலான வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.
சாக்கடையுடன் கலந்து வெளியேறும் நீரால்... நோய் தொற்று அபாயம் ஒருபுறம் இருக்க. பலர் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட பலருக்கு பொதுமக்கள் சிலர் தானாக முன்வந்து உதவி செய்வதையும் பார்க்க முடிகிறது.
மிக்ஜாம் புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதால்... இன்று இரவு முதல் மெல்ல மெல்ல மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல் தற்போது கொட்டி தீர்த்துள்ள மழையால்... சென்னை மக்கள் சகஜ நிலைக்கு வர ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பழம்பெரு நடிகர் சிவகுமாரின் புதல்வர்களான சூர்யா மற்றும் கார்த்தி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளனர். தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.