மக்களே குடை, ரெயின் கோட் எல்லாம் ரெடியா.. 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் பொளந்து கட்டப்போகும் மழை..!
கடலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரங்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.