சென்னை மேயர் பிரியாவுடன் மோதும் கார்த்தி சிதம்பரம்; கறாராக கணக்கு கேட்டு கடிதம்!!
கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சென்னை மேயர் பிரியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கூவம் ஆற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும், ரூ.750 கோடி ஒதுக்கீட்டில் ரூ.329 கோடி செலவிடப்பட்டும் முன்னேற்றம் இல்லாததால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையை சுற்றி ஓடுது பார் கூவம்
சிங்காராமா ஊரு.. சென்னையினு பேரு.. ஊரை சுத்தி ஓடுது பாரு கூவம் ஆறு என ஒரு திரைப்படத்தில் பாடல் இடம்பெற்றிருக்கும் அதைப்போலவே சென்னையின் வளர்ச்சி ஒரு ஆற்றை கழிவுநீர் கால்வாய் ஆகிவிட்டது. இன்று கூவம் என்றால் ஆறு என்பது மறந்துபோய் கழிவுநீர் கால்வாய்க்கு உதாரணமாகவும் அடையாளமாகவும் மாறிவிட்டது. சென்னையில் ஓடும் கூவம் ஆறு 1940-கள் வரையிலும்கூட தெளிந்த நல்ல நீர் ஓடியது. மக்கள் தொகை பெருக்கும், தொழில் துறை வளர்ச்சியின் காரணமாக கழிவுகள் கழந்து சாக்கடையாக மாறிவிட்டது கூவம்.
கூவத்தை மீட்டெடுக்க முயற்சி
சிங்கார சென்னனையின் அழகை கூட்டும் வகையில் கூவம் நதியை மீட்டெடுக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றன. ஆனால், கூவம் எப்போது ஒரு நதியாக மீட்டெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து கொண்டே வருகிறது. கூவம் நதியை சீரமைத்து மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர கடந்த திமுக ஆட்சிகாலமான 2006-2011 திமுக ஆட்சியில் துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
அப்போதைய மேயர் சுப்பிரமணியன் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள சான் ஆண்டனியோ மாகாணத்துடன் சென்னை மாநகராட்சி நீர்நிலைகள் மீட்டெடுத்தல் தொடர்பாக சகோதர ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த திட்டம் திமுக ஆட்சி மாறிய பின் கிடப்பில் போடப்பட்டது. தற்போது சென்னை மாநகர மேயராக உள்ள பிரியா, கடந்த ஜூலை மாதம் சான் ஆன்டனியோ மகாணத்துக்குச் சென்று சகோதர ஒப்பந்தத்தை புதுப்பித்து, பின்னர் சென்னை மாநகராட்சியுடன் திட்டங்கள் பரிமாறிக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது
கார்த்தி சிதம்பரம் கேள்வி
சான் ஆன்டனியோவில் உள்ள நதியை மீட்டெடுத்து சுற்றுலா தளமாக மாற்றியதை போல சென்னை கூவம் நதியை சீரமைக்க ஆய்வு செய்து அறிக்கை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதரம்பரம் திடீரென சென்னை மேயர் பிரியாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த ஆளுநர்.!! ஜாமீனில் வெளியே வருதில் உருவான புதிய சிக்கல்
கூவம் சீரமைக்கப்பட நிலை என்ன.?
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூவம் ஆறு குறிப்பிடத்தக்க மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த கால அறிக்கைகள் ஆபத்தான மோசமான நீரின் தரத்தை வெளிப்படுத்துகின்றன. கூவம் நதியை சீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், ஏற்கெனவே ரூ.329 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூவம் சீரமைக்க அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வழங்குதல் உட்பட நடந்து கொண்டிருக்கும் பணிகளை குறிப்பிட்டுள்ளீர்கள். இருப்பினும், இந்த முயற்சிகள் குறித்து தெளிவு இல்லாமல் உள்ளதாக கூறியுள்ளார்.
வெள்ளை அறிக்கை கொடுங்க
சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளையானது, கூவம் ஆற்றின் மறுசீரமைப்புக்காக இன்று வரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்கள் மற்றும் அவற்றை விவரிக்கும் ஒரு விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையில், கூவம் நிதியின் மறுசீரமைப்பு திட்டங்களின் சுருக்கம், ஒவ்வொரு திட்டத்தின் விளக்கம், அதன் குறிக் கோள்கள், காலக்கெடு, செலவுகள், விளைவுகள் உட்பட ஒவ்வொருதிட்டத்தின் விரிவான கணக்கை தெரிவிக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார் . சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் உட்பட சென்னையின் நீர்நிலைகளில் தினமும் விடப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் கிட்டத் தட்ட 30 சதவீதம் கூவம் ஆற்றில் கலக்கிறது.
தற்போதைய நிலை என்ன.?
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் சுமார் 60 சதவீதம் பக்கிங்ஹாம் கால்வாயில் பாய்கிறது, மீதி அடையாறு ஆற்றுக்கு செல்கிறது. எனவே, அடையாறு சிற்றோடையின் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு (58 ஏக்கர்), அடையாறு சிற்றோடை மற்றும் முகத்துவாரத்தின் சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு (300 ஏக்கர்), ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு திட்டம் ஆகிய வற்றின் தற்போதைய நிலையை தெரிவிக்க வேண்டும் இவ்வாறு கடிதத்தில் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.