எனக்கே அனுமதி மறுப்பா? ஆவேசமாக நடுரோட்டில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட பவன் கல்யாண்.. என்ன காரணம் தெரியுமா?
ஊழல் வழக்கில் கைதான ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் ஜனசேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நள்ளிரவில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு நேற்று அதிகாலை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனிடையே, சந்திரபாபு நாயுடு கைது அரசியல் பழிவாங்கும் நடவடிககை என்று ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவை சந்திக்கச் சென்ற ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பவன் கல்யாண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நள்ளிரவில் சாலையில் அமர்ந்தும் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு காவல்துறை அதிகாரிகள் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து பவன் கல்யாணை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமின் வழங்கக்கோரி விஜயவாடா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.